செல்லுபடியாகும் டிஜிட்டல் வாகனக் காப்புறுதி அட்டைகளை ஏற்க மறுக்கும் பொலிஸ் அதிகாரிகளுக்கு எதிராக நடவடிக்கை எடுக்கப்படலாம் என இலங்கை பொலிஸ் எச்சரிக்கை விடுத்துள்ளது.
பொலிஸ் மா அதிபரால் (IGP) ஏற்கனவே வழங்கப்பட்டுள்ள அறிவுறுத்தல்களைப் பின்பற்றத் தவறும் அதிகாரிகளுக்கு எதிராக நடவடிக்கை எடுக்கப்படும் என போக்குவரத்துக் கட்டுப்பாடு மற்றும் வீதி பாதுகாப்புப் பிரிவுக்குப் பொறுப்பான பிரதி பொலிஸ் மா அதிபர் சேனாதீர தெரிவித்துள்ளார்.
சமூக ஊடகங்களில் பரவி வரும் சில சம்பவங்களைச் சுட்டிக்காட்டிய அவர், பொலிஸ் அதிகாரிகள் டிஜிட்டல் காப்புறுதி அட்டைகளை ஏற்க மறுத்ததால் வாகன சாரதிகள் பல்வேறு சிரமங்களை எதிர்கொண்டுள்ளதாக குறிப்பிட்டார்.
பாதுக்கை பொலிஸ் நிலையத்தின் போக்குவரத்துப் பிரிவுக்குப் பொறுப்பான அதிகாரி தொடர்பான அண்மைய சம்பவம் மற்றும் கம்பஹா தலைமையக பொலிஸ் நிலையத்துடன் தொடர்புடைய முன்னைய சம்பவம் ஆகியவற்றையும் அவர் சுட்டிக்காட்டினார்.
அங்கீகரிக்கப்பட்ட காப்புறுதி நிறுவனங்களால் வழங்கப்படும் டிஜிட்டல் காப்புறுதி அட்டைகளை ஏற்றுக்கொள்ள வேண்டும் என நாடளாவிய ரீதியில் உள்ள அனைத்து பொலிஸ் நிலையங்களுக்கும் அதிகாரிகளுக்கும் ஏற்கனவே அறிவுறுத்தல்கள் வழங்கப்பட்டுள்ளதாக பிரதி பொலிஸ் மா அதிபர் தெரிவித்தார்.
இலங்கை காப்புறுதி ஒழுங்குமுறை ஆணைக்குழுவும் சுமார் 14 காப்புறுதி நிறுவனங்களால் வழங்கப்படும் டிஜிட்டல் காப்புறுதி அட்டைகள் தொடர்பில் பொலிஸாருக்கு அறிவித்துள்ளதாக அவர் குறிப்பிட்டார்.
மேலும், 2006ஆம் ஆண்டின் 19ஆம் இலக்க இலத்திரனியல் பரிவர்த்தனைகள் சட்டத்தின் கீழும் இவ்வாறான இலத்திரனியல் ஆவணங்களை ஏற்றுக்கொள்வதற்கு சட்டபூர்வ அங்கீகாரம் உள்ளதாக அவர் தெரிவித்தார்.
வாகன சாரதி உடனடியாக டிஜிட்டல் காப்புறுதி அட்டையை காண்பிக்க முடியாத சந்தர்ப்பத்திலும், வாகனத்திற்கு செல்லுபடியாகும் காப்புறுதி உள்ளதா என்பதை பொலிஸ் அதிகாரிகள் உறுதிப்படுத்துவதற்கான வசதிகள் வழங்கப்பட்டுள்ளதாகவும் அவர் கூறினார்.
இதன்படி, *138# என்ற குறியீட்டைப் பயன்படுத்தியோ அல்லது வாகனப் பதிவு இலக்கம் அல்லது காப்புறுதி இலக்கத்தைப் பயன்படுத்தி SMS சேவையின் ஊடாகவோ காப்புறுதி விபரங்களைச் சரிபார்க்க முடியும்.
மேலும், தேவையான உதவிகளுக்காக 138 அழைப்பு நிலையத்தையும் தொடர்புகொள்ள முடியும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்தச் சரிபார்ப்பை வாகன சாரதியின் கையடக்கத் தொலைபேசி, பொலிஸ் அதிகாரியின் தொலைபேசி அல்லது கிடைக்கக்கூடிய வேறு எந்த கையடக்கத் தொலைபேசியின் ஊடாகவும் மேற்கொள்ள முடியும் என பிரதி பொலிஸ் மா அதிபர் சுட்டிக்காட்டினார்.
சமீபத்திய முறைப்பாடுகளைத் தொடர்ந்து, டிஜிட்டல் காப்புறுதி அட்டைகளை ஏற்றுக்கொள்வது மற்றும் அவற்றைச் சரிபார்ப்பது தொடர்பான அறிவுறுத்தல்களை நாடளாவிய ரீதியில் உள்ள 607 பொலிஸ் நிலையங்களுக்கும் மீண்டும் நினைவூட்டுமாறு கோரிக்கை விடுத்துள்ளதாக அவர் தெரிவித்தார்.
செல்லுபடியாகும் டிஜிட்டல் காப்புறுதி அட்டையை பொலிஸ் அதிகாரி ஒருவர் ஏற்க மறுத்தால், சம்பந்தப்பட்ட பொலிஸ் நிலையப் பொறுப்பதிகாரி அல்லது சிரேஷ்ட பொலிஸ் அதிகாரியிடம் முறைப்பாடு செய்ய முடியும்.
அத்துடன், சம்பவம் தொடர்பான முழுமையான விபரங்களுடன் போக்குவரத்துக் கட்டுப்பாடு மற்றும் வீதி பாதுகாப்புப் பிரிவுக்கு 070 475 5600 என்ற WhatsApp இலக்கத்தின் ஊடாகவும் முறைப்பாடுகளை முன்வைக்க முடியும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.“உங்களுடைய டிஜிட்டல் காப்புறுதி அட்டை செல்லுபடியாகும்” என வலியுறுத்திய பிரதி பொலிஸ் மா அதிபர் சேனாதீர, டிஜிட்டல் காப்புறுதி அட்டைகளை எவ்வாறு சரிபார்ப்பது என்பது தொடர்பில் பொலிஸ் அதிகாரிகளுக்கு ஏற்கனவே அறிவுறுத்தல்கள் வழங்கப்பட்டுள்ளதாக தெரிவித்தார்.
இந்த அறிவுறுத்தல்களைப் புறக்கணிக்கும் பொலிஸ் அதிகாரிகள் பாரதூரமான கடமையிலிருந்து தவறியதாகக் கருதப்பட்டு, முறைப்பாடு கிடைக்கும் பட்சத்தில் அவர்களுக்கு எதிராக நடவடிக்கை எடுக்கப்படலாம் எனவும் அவர் எச்சரித்துள்ளார்.









