வடக்கு ஈராக்கின் எர்பில் மாகாணத்தில் உள்ள அமெரிக்கத் தளங்களை இலக்காகக் கொண்டு ஏவுகணைகள் மற்றும் ட்ரோன்கள் மூலம் ஒருங்கிணைந்த தாக்குதல் நடத்தப்பட்டதாக ஈரானின் இஸ்லாமிய புரட்சிகர காவல்படை (IRGC) தெரிவித்துள்ளது.
தெற்கு கடலோர நகரமான சிரிக்கில் நடைபெற்ற திருமணக் கொண்டாட்டத்தின் மீது அமெரிக்கா நடத்திய தாக்குதலில் குழந்தை உட்பட நான்கு பேர் கொல்லப்பட்டதற்கு பதிலடியாக இந்தத் தாக்குதல் நடத்தப்பட்டதாக IRGC தெரிவித்துள்ளது.
அரச ஒளிபரப்பு நிறுவனமான IRIB வெளியிட்ட அறிக்கையில், இந்தத் தாக்குதலில் பழுதுபார்ப்பு நிலையம் ஒன்றும், தொழில்நுட்ப உபகரணங்கள் வைக்கப்பட்டிருந்த களஞ்சியசாலைகளும், அமெரிக்காவின் கண்காணிப்பு பலூனை வழிநடத்தும் கட்டுப்பாட்டு அமைப்பு ஒன்றும் அழிக்கப்பட்டதாக IRGC கூறியுள்ளது.
மேலும், அந்தத் தளத்தில் இருந்த எரிபொருள் தொட்டிகள் தீப்பற்றி எரிந்ததாகவும், அமெரிக்கப் பணியாளர்கள் பலர் கொல்லப்பட்டதாகவும் IRGC தெரிவித்துள்ளது.
எனினும், உயிரிழப்புகள் அல்லது சேதங்கள் தொடர்பாக IRGC முன்வைத்துள்ள இந்தக் கூற்றுகளை உறுதிப்படுத்தும் தகவல்கள் இதுவரை வெளியாகவில்லை.







