ஏற்றுமதி நோக்கிலான தேசிய கனிம வளக் கொள்கை 2026-க்கு அமைவாக இலங்கையின் கனிம வளத்துறையை மேம்படுத்துவது தொடர்பான கலந்துரையாடல் நேற்று (31) பிற்பகல் ஜனாதிபதி செயலகத்தில் நடைபெற்றது.
ஜனாதிபதி அநுர குமார திஸாநாயக்க தலைமையில் நடைபெற்ற இக்கலந்துரையாடலில், இலங்கை கனிம மணல் சங்கம் (SLMSA) மற்றும் புவியியல் ஆய்வு மற்றும் சுரங்கப் பணியகம் ஆகியவற்றின் அதிகாரிகள் கலந்துகொண்டனர்.
இலங்கையின் கனிம வளங்களை ஆராய்தல், அகழ்தல் மற்றும் பெறுமதி சேர்த்தல், அத்துடன் அவற்றை முறையாகப் பயன்படுத்தி நாட்டின் பொருளாதார வளர்ச்சிக்கும் ஏற்றுமதி வருமானத்தை அதிகரிப்பதற்கும் தேவையான நடவடிக்கைகள் குறித்து விரிவாகக் கலந்துரையாடப்பட்டது.
கனிம வளத்துறைக்குத் தேவையான உட்கட்டமைப்பு வசதிகளை மேம்படுத்துதல், முதலீட்டாளர்களுக்கு ஊக்குவிப்புகளை வழங்குதல் மற்றும் உள்நாட்டு உற்பத்தித் துறைகளை வலுப்படுத்த ஆராய்ச்சி மற்றும் அபிவிருத்தியை ஊக்குவித்தல் ஆகியவற்றுக்கும் முக்கியத்துவம் வழங்கப்பட்டது.
மேலும், உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு முதலீடுகளை ஈர்ப்பதற்கான அவசர நடவடிக்கைகள் மற்றும் இத்துறையில் நிலவும் சவால்களைத் தீர்ப்பது குறித்தும் விரிவாக ஆராயப்பட்டது.
குறிப்பாக, சுரங்க நடவடிக்கைகளுக்கான உரிமங்களைப் பெறுதல் உள்ளிட்ட விடயங்களில் அரச நிறுவனங்களுடன் தொடர்புபடும்போது முதலீட்டாளர்கள் எதிர்கொள்ளும் சிரமங்களைத் தீர்ப்பது தொடர்பில் கவனம் செலுத்தப்பட்டது.
தற்போதைய கொள்கை கட்டமைப்பில் காணப்படும் குறைபாடுகள் குறித்தும் கவனம் செலுத்தப்பட்டதுடன், முதலீடுகளை ஈர்க்கும் செயல்முறையில் அதிகபட்ச வெளிப்படைத்தன்மையை உறுதி செய்வதுடன், தொடர்புடைய அனைத்து நிறுவனங்களுக்கும் இடையில் பயனுள்ள ஒருங்கிணைப்பை பேண வேண்டியதன் அவசியத்தையும் ஜனாதிபதி வலியுறுத்தினார்.
தொழில் மற்றும் தொழில் முனைவோர் மேம்பாட்டு அமைச்சர் சுனில் ஹந்துன்னெத்தி, இலங்கை முதலீட்டுச் சபையின் தலைவர், ஜனாதிபதியின் பொருளாதார விவகாரங்களுக்கான சிரேஷ்ட ஆலோசகர் துமிந்த ஹுலங்கமுவ, பணிப்பாளர் நாயகம் கலாநிதி ஜி.ஜி.எல். சுலக்ஷண ஜயவர்தன, புவியியல் ஆய்வு மற்றும் சுரங்கப் பணியகத்தின் தலைவர் சமன் ஜயசிங்க, பணிப்பாளர் நாயகம் என். பண்டார, இலங்கை கனிம மணல் சங்கத்தின் தலைவர் மங்கள பி.பி. யாப்பா, உப தலைவர் எலியன் வின்ஸ்டன் குணவர்தன மற்றும் SLMSA உறுப்பினர்கள் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.
(ஜனாதிபதி ஊடகப் பிரிவு)









