தேங்காய் பயிர்ச்செய்கையை விரிவுபடுத்தி, தேங்காய் துறையின் பொருளாதார பங்களிப்பை அதிகரிக்கும் நோக்கில், நாடளாவிய ரீதியில் 250 “செலோன் கிங் கொக்கனட் கிராமங்களை” உருவாக்க அரசாங்கம் திட்டமிட்டுள்ளது.
பெருந்தோட்ட மற்றும் சமூக உட்கட்டமைப்பு அமைச்சர் சமந்த வித்யாரத்ன இதனைத் தெரிவித்துள்ளார்.
செப்டம்பர் 2ஆம் திகதி சர்வதேச தேங்காய் தினத்தை முன்னிட்டு “செலோன் கிங் கொக்கனட் கிராமங்கள்” வேலைத்திட்டம் ஆரம்பிக்கப்படவுள்ளதுடன், இதன் முதற்கட்டமாக இந்த ஆண்டு 75 கிராமங்கள் உருவாக்கப்படவுள்ளன.
பொதுத்துறை, தனியார் துறை மற்றும் பெருந்தோட்ட மற்றும் சமூக உட்கட்டமைப்பு அமைச்சு ஆகியவற்றின் ஒத்துழைப்புடன் இந்த வேலைத்திட்டம் உருவாக்கப்பட்டுள்ளது.
ஏற்றுமதி வருமானத்தை அதிகரித்தல், வேலைவாய்ப்புகளை உருவாக்குதல் மற்றும் வறுமையைக் குறைத்தல் ஆகியவை இத்திட்டத்தின் முக்கிய நோக்கங்களாகும்.
இதற்கமைய, 2027ஆம் ஆண்டில் மேலும் 80 கிராமங்களும், 2028ஆம் ஆண்டில் மீதமுள்ள 95 கிராமங்களும் உருவாக்கப்படவுள்ளன. இதன் மூலம் 250 கிங் கொக்கனட் கிராமங்களை உருவாக்கும் வேலைத்திட்டம் முழுமையடையும்.
இத்திட்டத்தின் தேசிய மட்டத்திலான ஆரம்ப நிகழ்வு, குருநாகல் மாவட்டத்தின் பன்னல பிரதேச செயலகப் பிரிவில் உள்ள மாகந்துர பகுதியில் அமைந்துள்ள நாற்றுமேடையில் நடைபெறவுள்ளது.
முதற்கட்டத்தில் உருவாக்கப்படவுள்ள 75 கிராமங்களில் சுமார் 20 கிராமங்களில் செப்டம்பர் 2ஆம் திகதி நடவடிக்கைகள் ஆரம்பிக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. ஏனைய கிராமங்களிலும் அடுத்த ஒன்று முதல் இரண்டு வாரங்களுக்குள் நடவடிக்கைகள் ஆரம்பிக்கப்படும் என அமைச்சர் தெரிவித்துள்ளார்.
இதனுடன், ஏற்கனவே காணப்படும் கிங் கொக்கனட் பயிர்ச்செய்கைகளையும் புனரமைக்க நடவடிக்கை எடுக்கப்படவுள்ளது.
இதற்காக அடையாளம் காணப்பட்டுள்ள சுமார் 2,21,500 கிங் கொக்கனட் மரங்களுக்கு உரமிடுதல், தழைக்கூளம் இடுதல் மற்றும் நீர் விநியோகம் உள்ளிட்ட உதவிகள் வழங்கப்படவுள்ளன.
புனரமைப்பு வேலைத்திட்டத்தின் கீழ் ஒரு மரத்திற்கு 700 ரூபாய் உர மானியம் வழங்க எதிர்பார்க்கப்படுவதாக அமைச்சர் குறிப்பிட்டுள்ளார்.
மேலும், புதிதாக உருவாக்கப்படவுள்ள 250 கிராமங்களில் பயிரிடுவதற்காக அரசாங்கத்தால் 2,12,500 கிங் கொக்கனட் கன்றுகள் ஒதுக்கப்பட்டுள்ளன.
ஒரு கன்றின் மதிப்பிடப்பட்ட விலை 750 ரூபாய் என கணிக்கப்பட்டுள்ள நிலையில், பயிர்ச்செய்கையாளர்கள் ஒரு கன்றுக்கு சுமார் 150 ரூபாயை செலுத்த வேண்டும். மீதமுள்ள 600 ரூபாயை பெருந்தோட்ட மற்றும் சமூக உட்கட்டமைப்பு அமைச்சும் தென்னைப் பயிர்ச்செய்கை சபையும் ஏற்கவுள்ளன.
ஒவ்வொரு கிராமத்திலும் குறைந்தபட்சம் 1,000 புதிய கிங் கொக்கனட் கன்றுகள் பயிரிடப்பட வேண்டும். அவை இத்திட்டத்தில் பங்கேற்கும் பொதுமக்களுக்கு சொந்தமான காணிகளில் பயிரிடப்படவுள்ளன.
உலகளாவிய ரீதியில் தேங்காய் மற்றும் தேங்காய் சார்ந்த உற்பத்திகளுக்கான கேள்வி அதிகரித்து வருவதால், அந்த வாய்ப்பைப் பயன்படுத்தி நாட்டின் தேங்காய் துறையை விரிவுபடுத்தி, தேசிய பொருளாதாரத்திற்கான அதன் பங்களிப்பை அதிகரிக்க முடியும் என அமைச்சர் சமந்த வித்யாரத்ன தெரிவித்துள்ளார்.









