இன்று மலேசியாவின் 69ஆவது தேசிய தினம் கொண்டாடப்படுகிறது. இது நாட்டின் வரலாற்றில் ஒரு முக்கியமான மைல்கல்லாகும். தேசிய அடையாளம், கடந்தகால சாதனைகள் மற்றும் எதிர்கால இலக்குகளை மீளாய்வு செய்வதற்கான சந்தர்ப்பமாகவும் இந்நாள் அமைகிறது.
இவ்வாண்டின் தேசிய தினக் கொண்டாட்டம் “Malaysia MADANI: Kesejahteraan Dinikmati” என்ற தொனிப்பொருளின் கீழ் நடைபெறுகிறது. இதன் பொருள் “மலேசியா MADANI: மக்கள் அனுபவிக்கும் செழிப்பு” என்பதாகும். மக்களின் நலன் மற்றும் செழிப்பை உறுதி செய்வதை நோக்கமாகக் கொண்ட அரசாங்கத்தின் கொள்கைகள் மற்றும் முன்னுரிமைகளை இந்தத் தொனிப்பொருள் எடுத்துக்காட்டுகிறது.
மலேசிய பிரதமர் மாண்புமிகு டத்தோ’ ஸ்ரீ அன்வார் இப்ராஹிம் அவர்களால் முன்னெடுக்கப்படும் Malaysia MADANI கருத்தாக்கம், நிலைத்தன்மை, செழிப்பு, புத்தாக்கம், மரியாதை, நம்பிக்கை மற்றும் இரக்கம் ஆகிய ஆறு அடிப்படை மதிப்புகளின் அடிப்படையில் உள்ளடக்கிய சமூகத்தைக் கொண்ட தேசத்தை உருவாக்குவதை நோக்கமாகக் கொண்டுள்ளது.
MADANI கருத்தாக்கம் பொருளாதார ரீதியாக வலுவானது மட்டுமன்றி, சமூக ரீதியாக ஒருங்கிணைந்ததும், ஒழுக்க விழுமியங்களை அடிப்படையாகக் கொண்டதும், சுற்றுச்சூழல் பொறுப்புணர்வுடன் செயல்படுவதுமான ஒரு தேசத்தை உருவாக்கும் மலேசியாவின் இலட்சியத்தை பிரதிபலிக்கிறது.
இந்தக் கொள்கை உள்நாட்டு விவகாரங்களில் மட்டுமன்றி, இலங்கை உள்ளிட்ட சர்வதேச சமூகத்துடனான மலேசியாவின் உறவுகளிலும் வழிகாட்டியாக அமைகிறது.
இந்த முக்கியமான தினத்தைக் கொண்டாடும் வேளையில், மலேசியாவுக்கும் இலங்கைக்கும் இடையிலான நீண்டகால நட்புறவையும் நாம் நினைவுகூருகிறோம். இரு நாடுகளுக்கும் இடையிலான இராஜதந்திர உறவுகள் 1957ஆம் ஆண்டு நிறுவப்பட்டதுடன், நீண்டகால வரலாறு, நெருக்கமான மக்கள் தொடர்புகள் மற்றும் வளர்ந்து வரும் பொருளாதார ஒத்துழைப்பு ஆகியவற்றைக் கொண்டுள்ளன.
உலகளாவிய பல்வேறு பிரச்சினைகள் மற்றும் சவால்கள் தொடர்பில் இரு நாடுகளும் பொதுவான கருத்துக்களைப் பகிர்ந்து கொள்கின்றன. இது இருதரப்பு ஒத்துழைப்பை விரிவுபடுத்துவதற்கும், புதிய வளர்ச்சி வாய்ப்புகளை உருவாக்குவதற்கும் வலுவான அடித்தளமாக அமைந்துள்ளது.
வர்த்தகம் மற்றும் முதலீடு ஆகியவை இரு நாடுகளின் கூட்டுறவில் முக்கிய இடத்தை வகிக்கும் அதேவேளை, கல்வி, சுற்றுலா, விவசாயம் மற்றும் உணவுப் பாதுகாப்பு போன்ற துறைகளிலும் குறிப்பிடத்தக்க ஒத்துழைப்பு வாய்ப்புகள் உள்ளன.
எதிர்காலத்தில் இலங்கைக்கும் மலேசியாவுக்கும் இடையில் மேலும் ஆழமானதும் மூலோபாய ரீதியாக வலுவானதுமான கூட்டாண்மையை எதிர்பார்க்கிறேன். காலநிலை மாற்றத்தை எதிர்கொள்ளும் திறன், டிஜிட்டல் மாற்றம், ஹலால் தொழில்துறை மற்றும் இளைஞர் வலுவூட்டல் உள்ளிட்ட புதிய துறைகளிலும் இரு நாடுகளின் ஒத்துழைப்பு விரிவடையும் என எதிர்பார்க்கப்படுகிறது.
சமீபத்திய இராஜதந்திர சந்திப்புகள் மற்றும் இருதரப்பு உயர்மட்டப் பயணங்கள் மூலம் இலங்கையும் மலேசியாவும் தமது உறவுகளை தீவிரமாக விரிவுபடுத்தி வருகின்றன. இந்த உறவுகளை மேலும் வலுப்படுத்துவது, இரு நாடுகளுக்கும் இடையிலான பரஸ்பர புரிதலை மேம்படுத்தவும், இருதரப்பு உறவுகளை ஆழப்படுத்தவும், நீடித்த நல்லுறவை உருவாக்கவும் முக்கியமானதாகும்.
இரு நாடுகளின் ஒத்துழைப்பில் சுற்றுலாத்துறையும் முக்கியமான ஒரு துறையாகும்.
Visit Malaysia 2026 (VMY2026) திட்டத்தின் ஒரு பகுதியாக, இலங்கை சுற்றுலாப் பயணிகள் மலேசியாவின் செழுமையையும் பன்முகத்தன்மையையும் அனுபவிக்குமாறு அன்புடன் அழைக்கப்படுகின்றனர்.
பன்முக கலாசார நகரங்கள், யுனெஸ்கோ உலக பாரம்பரிய தளங்கள், அழகிய தீவுகள், குளிர்ச்சியான மலைப்பகுதிகள், மழைக்காடுகள் மற்றும் தனித்துவமான வனவிலங்குகள் என ஒவ்வொரு பயணிக்கும் ஏற்ற பல்வேறு அனுபவங்களை மலேசியா வழங்குகிறது.
மலேசியாவின் புகழ்பெற்ற விருந்தோம்பல், பல்வேறு வகையான உணவுகள், உலகத் தரம் வாய்ந்த வர்த்தக வளாகங்கள், குடும்பத்தினருக்கான பொழுதுபோக்கு இடங்கள், ஆரோக்கிய மற்றும் மருத்துவ சுற்றுலா, கல்வி வாய்ப்புகள் மற்றும் வர்த்தக நிகழ்வுகள் ஆகியவை மலேசியாவை பிராந்தியத்தில் விரும்பத்தக்க சுற்றுலாத் தலமாக தொடர்ந்து நிலைநிறுத்துகின்றன.









