2026ஆம் ஆண்டின் முதல் ஏழு மாதங்களில் இலங்கையின் பொருட்கள் மற்றும் சேவைகள் ஏற்றுமதி வருவாய் 10.48 பில்லியன் அமெரிக்க டொலர்களை கடந்துள்ளதாக இலங்கை ஏற்றுமதி அபிவிருத்திச் சபை (EDB) தெரிவித்துள்ளது.
ஜனவரி முதல் ஜூலை வரையான காலப்பகுதியில் மொத்த ஏற்றுமதி வருவாய் 5.5% அதிகரித்துள்ளது.
இதில் பொருட்கள் ஏற்றுமதி மூலம் 8.19 பில்லியன் டொலர்களும், சேவைகள் ஏற்றுமதி மூலம் 2.30 பில்லியன் டொலர்களும் கிடைத்துள்ளன. சேவைகள் ஏற்றுமதி 7.02% வளர்ச்சியடைந்துள்ளது.
ஜூலை மாதத்தில் மட்டும் மொத்த ஏற்றுமதி வருவாய் 1.64 பில்லியன் டொலர்களாக பதிவாகியுள்ளது. இது கடந்த ஆண்டு ஜூலை மாதத்துடன் ஒப்பிடுகையில் 2.63% அதிகமாகும்.
ஜனவரி–ஜூலை காலப்பகுதியில் மின்சார மற்றும் மின்னணு உதிரிப்பாகங்கள், உணவு மற்றும் பானங்கள், மசாலாப் பொருட்கள், தேங்காய் மற்றும் இறப்பர் சார்ந்த பொருட்களின் ஏற்றுமதியில் குறிப்பிடத்தக்க வளர்ச்சி பதிவாகியுள்ளது. ICT/BPM சேவைகள் ஏற்றுமதியும் 14.54% அதிகரித்து 1.02 பில்லியன் டொலர்களை எட்டியுள்ளது.
அதேவேளை, ஆடை மற்றும் ஜவுளி, தேயிலை மற்றும் கடலுணவு ஏற்றுமதிகளில் சரிவு ஏற்பட்டுள்ளது.
இலங்கையின் மிகப்பெரிய ஏற்றுமதி சந்தையாக அமெரிக்கா தொடர்ந்தும் காணப்படும் நிலையில், இந்தியாவுக்கான ஏற்றுமதி 36.16% அதிகரித்து 688.47 மில்லியன் டொலர்களாக பதிவாகியுள்ளது. துருக்கிக்கான ஏற்றுமதியும் 92.48% அதிகரித்துள்ளது.
EDB தலைவர் மங்கள விஜேசிங்க, முதல் ஏழு மாதங்களிலேயே 10 பில்லியன் டொலர் ஏற்றுமதி இலக்கை கடந்தது இலங்கையின் ஏற்றுமதித் துறையின் வலிமையையும் வளர்ச்சியையும் வெளிப்படுத்துவதாக தெரிவித்துள்ளார்.












