22ஆவது அரசியலமைப்புத் திருத்தச் சட்டமூலத்தின் அரசியலமைப்புச் சட்டபூர்வத்தன்மையை சவாலுக்கு உட்படுத்தி தாக்கல் செய்யப்பட்டுள்ள மனுக்களை விசாரிப்பதற்காக ஐந்து நீதியரசர்கள் கொண்ட உயர் நீதிமன்ற அமர்வு நியமிக்கப்பட்டுள்ளது.
இந்த அமர்விற்கு பிரதம நீதியரசர் ப்ரீத்தி பத்மன் சூரசேன தலைமை தாங்கவுள்ளதுடன், நீதியரசர்களான அச்சல வெங்கப்புலி, அர்ஜுன ஒபேசேகர, சம்பத் அபேகூன் மற்றும் கிஹான் குலதுங்க ஆகியோர் உறுப்பினர்களாக இடம்பெறுகின்றனர்.
குறித்த மனுக்கள் செப்டெம்பர் 1ஆம் திகதி செவ்வாய்க்கிழமை உயர் நீதிமன்றத்தில் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்படவுள்ளன.22ஆவது அரசியலமைப்புத் திருத்தச் சட்டமூலத்திற்கு எதிராக இலங்கை சட்டத்தரணிகள் சங்கம் உள்ளிட்ட பல்வேறு தரப்பினரால் பல மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டுள்ளன.
நீதித்துறையுடன் தொடர்புடைய முன்மொழியப்பட்ட மாற்றங்கள் உள்ளிட்ட பல்வேறு விடயங்கள் தொடர்பில் 22ஆவது அரசியலமைப்புத் திருத்தச் சட்டமூலம் சட்ட ரீதியாகவும் அரசியல் ரீதியாகவும் விவாதத்தை ஏற்படுத்தியுள்ளது.இந்தச் சட்டமூலத்தின் அரசியலமைப்புச் சட்டபூர்வத்தன்மை தொடர்பில் உயர் நீதிமன்றம் வழங்கும் தீர்மானத்திற்கு அரசாங்கம் கட்டுப்படும் என தெரிவித்துள்ளது.









