முன்னாள் மத்திய வங்கி ஆளுநர் அர்ஜுன மகேந்திரன், தான் சட்டரீதியாக பெயரை மாற்றியுள்ளதாக வெளியான தகவல்களை முற்றிலும் மறுத்துள்ளார்.
தனது பெயர் மாற்றப்பட்டுள்ளதாக முன்வைக்கப்பட்டுள்ள குற்றச்சாட்டு “முற்றிலும் பொய்யானது” என அவர் நியூஸ்வயர் ஊடகத்துக்கு கடிதம் ஒன்றை அனுப்பி தெரிவித்துள்ளார்.
“இலங்கை அரசாங்கத்தின் அமைச்சர் ஒருவர், நான் எனது பெயரை மாற்றியுள்ளதாக பகிரங்கமாக தெரிவித்திருப்பதாக எனது கவனத்திற்கு கொண்டுவரப்பட்டுள்ளது.
அத்தகைய குற்றச்சாட்டு முற்றிலும் பொய்யானது என்பதை உங்களுக்கும் உங்கள் வாசகர்களுக்கும் தெரிவித்துக்கொள்ள விரும்புகிறேன்” என மகேந்திரன் தனது கடிதத்தில் குறிப்பிட்டுள்ளதாக நியூஸ்வயர் செய்தி வெளியிட்டுள்ளது.
அவர் குறித்த கடிதத்தில் “Lakshman Arjuna Mahendran” என்ற பெயரில் கையொப்பமிட்டுள்ளதுடன், சிங்கப்பூர் முகவரியொன்றையும் வழங்கியுள்ளார்.
மத்திய வங்கி பிணைமுறி விவகாரம் தொடர்பில் தேடப்பட்டு வரும் முன்னாள் மத்திய வங்கி ஆளுநர் தனது பெயரை “Harjan Alexander” என மாற்றியுள்ளதாக அதிகாரிகளுக்கு தகவல் கிடைத்திருப்பதாக பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சர் ஆனந்த விஜேபால அண்மையில் தெரிவித்திருந்தார்.
குறித்த பெயர் மாற்றம் தொடர்பான தகவல்கள் குற்றப் புலனாய்வுத் திணைக்களத்திற்கும் கிடைத்துள்ளதாக அமைச்சர் கூறியிருந்தார்.
மேலும், சிங்கப்பூரிலிருந்து அர்ஜுன மகேந்திரனை இலங்கைக்கு நாடு கடத்துவதில் ஏற்பட்டுள்ள தடைகளுக்கு மத்தியில், அவரை நாட்டுக்கு அழைத்து வருவதற்கான மாற்று சட்ட வழிமுறைகள் குறித்து அதிகாரிகள் ஆராய்ந்து வருவதாகவும் அமைச்சர் தெரிவித்திருந்தார்.
2015ஆம் ஆண்டு இடம்பெற்ற மத்திய வங்கி திறைசேரி பிணைமுறி விவகாரம் தொடர்பான சட்ட நடவடிக்கைகளில் அர்ஜுன மகேந்திரன் இலங்கை அதிகாரிகளால் தேடப்பட்டு வருகின்றார்.
இந்நிலையில், தனது பெயரை மாற்றியுள்ளதாக அரசாங்க தரப்பில் வெளியான தகவலை அர்ஜுன மகேந்திரன் நேரடியாக மறுத்துள்ளதால், அவரது பெயர் மாற்றம் தொடர்பில் அவருக்கும் இலங்கை அதிகாரிகளுக்கும் இடையில் முரண்பட்ட தகவல்கள் வெளியாகியுள்ளன.









