சிறையில் உள்ள முன்னாள் பாகிஸ்தான் பிரதமரும், கிரிக்கெட் ஜாம்பவானுமான இம்ரான் கானுக்கு முறையான மருத்துவ சிகிச்சை வழங்கப்பட வேண்டும் என முன்னாள் பாகிஸ்தான் அணித்தலைவர் மொயின் கான் கோரிக்கை விடுத்துள்ளார்.
1992ஆம் ஆண்டு உலகக் கிண்ணத்தை வென்ற பாகிஸ்தான் அணியில் இம்ரான் கானின் தலைமையின் கீழ் விளையாடிய மொயின் கான், தனது முன்னாள் அணித்தலைவரின் உடல்நிலை குறித்து கவலை வெளியிட்டதுடன், அவருக்கு உரிய மருத்துவ வசதிகள் வழங்கப்பட வேண்டும் என தெரிவித்துள்ளார்.
மொயின் கானின் இந்தக் கருத்து, முன்னாள் பாகிஸ்தான் அணித்தலைவர் ஜாவித் மியாண்டாட் இம்ரான் கானின் சிகிச்சை தொடர்பில் அண்மையில் உணர்வுபூர்வமான வேண்டுகோளை விடுத்து, அவரை விடுதலை செய்யுமாறு கோரியதைத் தொடர்ந்து வெளியாகியுள்ளது.
இம்ரான் கானின் உடல்நிலை மற்றும் அவருக்கு வழங்கப்படும் மருத்துவ சிகிச்சை தொடர்பில் பாகிஸ்தான் கிரிக்கெட்டுடன் தொடர்புடைய மேலும் பல முக்கிய பிரமுகர்கள் பகிரங்கமாக கவலை வெளியிட்டு வருகின்றனர்.
இதற்கு முன்னதாக, சுனில் கவாஸ்கர், கபில் தேவ், அலன் போடர், கிரெக் சேப்பல், இயன் சேப்பல், கிளைவ் லொய்ட் மற்றும் இலங்கையின் அர்ஜுன ரணதுங்க உள்ளிட்ட முன்னாள் சர்வதேச அணித்தலைவர்கள், இம்ரான் கானுக்கு உரிய மருத்துவ சிகிச்சை கிடைப்பதை உறுதி செய்யுமாறு பாகிஸ்தான் பிரதமர் ஷெஹ்பாஸ் ஷெரீப்பிடம் கோரிக்கை விடுத்திருந்தனர்.
அதேவேளை, அவுஸ்திரேலிய அணித்தலைவர் பாட் கம்மின்ஸ்வும் இந்த விவகாரம் தொடர்பில் கருத்து வெளியிட்டிருந்ததுடன், இம்ரான் கான் கண்ணியத்துடன் நடத்தப்படுவார் என நம்புவதாக தெரிவித்துள்ளார்.
73 வயதான இம்ரான் கான் 2023ஆம் ஆண்டு முதல் சிறையில் உள்ளார். அவரது குடும்பத்தினரும் ஆதரவாளர்களும் அவரது உடல்நிலை மற்றும் மருத்துவ சிகிச்சை பெறுவதற்கான அணுகல் குறித்து தொடர்ச்சியாக கவலை வெளியிட்டு வருகின்றனர். எனினும், அவருக்கு உரிய மருத்துவ சிகிச்சை மறுக்கப்படுவதாக முன்வைக்கப்படும் குற்றச்சாட்டுகளை பாகிஸ்தான் அதிகாரிகள் நிராகரித்துள்ளனர்.
பாகிஸ்தானின் மிகப் பிரபலமான விளையாட்டு வீரர்களில் ஒருவரான இம்ரான் கான், 1992ஆம் ஆண்டு பாகிஸ்தானை அதன் முதல் மற்றும் இதுவரையான ஒரே ஆண்கள் ஒருநாள் உலகக் கிண்ண வெற்றிக்கு வழிநடத்தினார். பின்னர் அரசியலில் ஈடுபட்ட அவர், 2018 முதல் 2022ஆம் ஆண்டு வரை பாகிஸ்தான் பிரதமராக பதவி வகித்தார்.









