கோதுமை மாவின் விலை அண்மையில் அதிகரிக்கப்பட்டுள்ளமை குறித்து எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச கடும் விமர்சனம் வெளியிட்டுள்ளார். இந்த விலை அதிகரிப்பு உணவுப் பொருட்களின் விலைகளை மேலும் அதிகரிப்பதுடன், ஏற்கனவே வாழ்க்கைச் செலவுகளை சமாளிக்க முடியாமல் சிரமப்படும் குடும்பங்களுக்கு கூடுதல் அழுத்தத்தை ஏற்படுத்தும் என அவர் எச்சரித்துள்ளார்.
ஹம்பாந்தோட்டை, திஸ்ஸமஹாராம பகுதியில் நடைபெற்ற விவசாயிகள் சந்திப்பொன்றில் உரையாற்றிய சஜித் பிரேமதாச, கோதுமை மாவின் விலை கிலோகிராமுக்கு ரூ.17 அதிகரிக்கப்பட்டுள்ளதால், பாண், பேக்கரி உற்பத்திகள் மற்றும் மாவைப் பயன்படுத்தி தயாரிக்கப்படும் ஏனைய உணவுப் பொருட்களின் விலைகளும் அதிகரிக்கும் எனத் தெரிவித்தார்.
சர்வதேச ரீதியில் 130 நாடுகளின் குறைந்தபட்ச ஊதியத்தை ஒப்பிடுகையில், இலங்கை 120ஆவது இடத்தில் இருப்பதாகவும் அவர் கூறினார். நாட்டில் அதிகரித்து வரும் வாழ்க்கைச் செலவுகளை சமாளிப்பதற்கு தற்போதைய ஊதியங்கள் போதுமானதாக இல்லை என்றும் அவர் சுட்டிக்காட்டினார்.
மாகாண சபைத் தேர்தலை நடத்துமாறும் சஜித் பிரேமதாச அரசாங்கத்திற்கு சவால் விடுத்தார். தேர்தலை நடத்துவதன் மூலம் அரசாங்கத்திற்கு மக்கள் மத்தியில் உள்ள ஆதரவு எந்தளவில் உள்ளது என்பதை அளவிடுவதற்கான வாய்ப்பு கிடைக்கும் என அவர் தெரிவித்தார்.
உயர்நீதிமன்ற நீதிபதிகளின் ஓய்வு பெறும் வயதை அதிகரிப்பதற்கு முன்மொழியப்பட்டுள்ள அரசியலமைப்பின் 22ஆவது திருத்தம் தொடர்பாகவும் அவர் கருத்து வெளியிட்டார். நீதித்துறையின் சுயாதீனத்தைக் கீழறுக்கும் வகையிலும் ஜனநாயக நிறுவனங்களில் தலையிடும் வகையிலும் அரசாங்கம் செயற்படுவதாக அவர் குற்றஞ்சாட்டினார்.
அத்துடன், வாழ்க்கைத் தரம் தொடர்பான உத்தியோகபூர்வ கணக்கீடுகள் குறித்தும் அவர் கேள்வி எழுப்பினார். குடிசன மற்றும் புள்ளிவிபரத் திணைக்களத்தை மேற்கோள்காட்டி, மாதம் ரூ.17,315 என்ற தொகையில் ஒருவரால் ஒரு மாதத்தை சமாளித்து வாழ முடியுமா என்றும் அவர் கேள்வி எழுப்பினார்.
வறுமை, வேலைவாய்ப்பு, விவசாயம், சுகாதாரம் மற்றும் முதலீடு உள்ளிட்ட பல்வேறு விடயங்கள் குறித்தும் எதிர்க்கட்சித் தலைவர் கவலை வெளியிட்டார். பொருளாதார நெருக்கடிகளை எதிர்கொள்ளும் மக்களுக்கு அரசாங்கம் போதுமான நிவாரணங்களை வழங்கத் தவறியுள்ளதாகவும் அவர் குற்றஞ்சாட்டினார்.
நாட்டின் மக்கள் தொகையில் 30 முதல் 40 சதவீதம் வரையிலானோர் வறுமையில் வாழ்வதாக சஜித் பிரேமதாச தெரிவித்தார். பாதிக்கப்பட்ட குடும்பங்கள் தமது பொருளாதார நிலைமையை மேம்படுத்துவதற்கு உதவும் வகையில் தெளிவான வேலைத்திட்டமொன்றை நடைமுறைப்படுத்த வேண்டும் என்றும் அவர் வலியுறுத்தினார்.
மேலும், அந்நிய நேரடி முதலீடுகளை ஈர்ப்பதற்கான வலுவான கொள்கைகளை உருவாக்குவதுடன், இலங்கையின் சுற்றுலாத்துறையை அபிவிருத்தி செய்வதற்கான தேசிய மூலோபாயமொன்றை வகுக்க வேண்டும் என்றும் அவர் அழைப்பு விடுத்தார்.









