இலங்கை மற்றும் இந்தியாவுக்கு இடையிலான கல்வி, கலாசாரம், விவசாயம், விஞ்ஞானம் மற்றும் தொழில்நுட்பம் உள்ளிட்ட துறைகளில் ஒத்துழைப்பை வலுப்படுத்தும் நோக்கில், சுமார் ரூ.21 மில்லியன் பெறுமதியான 13 திட்டங்களுக்கு இலங்கை – இந்தியா அறக்கட்டளை (ISLF) அனுமதி வழங்கியுள்ளது.
இந்தத் திட்டங்கள் தொடர்பான அனுமதி, அறக்கட்டளையின் 41ஆவது பணிப்பாளர் சபைக் கூட்டத்தில் வழங்கப்பட்டுள்ளது. குறித்த கூட்டம் ஆகஸ்ட் 28ஆம் திகதி புதுடெல்லியில் நடைபெற்றதுடன், இலங்கைக்கான இந்திய உயர்ஸ்தானிகர் சந்தோஷ் ஜா மற்றும் இந்தியாவுக்கான இலங்கை உயர்ஸ்தானிகர் மஹிஷினி கொலொன்ன ஆகியோர் இணைத் தலைமை வகித்தனர்.
கொழும்பு செயலகத்திற்கு 500க்கும் மேற்பட்ட திட்ட முன்மொழிவுகள் கிடைத்திருந்த நிலையில், அவற்றில் 137 முன்மொழிவுகள் பரிசீலனைக்குப் பின்னர் தெரிவு செய்யப்பட்டன. அவற்றில் 20 முன்மொழிவுகள் பணிப்பாளர் சபையின் பரிசீலனைக்கு சமர்ப்பிக்கப்பட்டதுடன், 13 திட்டங்களுக்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது.
இரு நாடுகளிலும் அறக்கட்டளையின் செயற்பாடுகள் தொடர்பில் பொதுமக்களின் ஆர்வம் அதிகரித்துள்ளதையும் பணிப்பாளர் சபை சுட்டிக்காட்டியுள்ளது.
நிதி நெருக்கடி காரணமாக கூட்டத்திற்கு முன்னதாக முறையான திட்ட முன்மொழிவுக் கோரிக்கை விடுக்கப்படாத போதிலும், புதுடெல்லி செயலகத்திற்கு இந்திய பிரஜைகளிடமிருந்து 149 முன்மொழிவுகள் கிடைத்துள்ளன.
இந்த நிலையில், அறக்கட்டளையின் நிதித் திறனை மேலும் வலுப்படுத்த வேண்டியதன் அவசியத்தை பணிப்பாளர் சபை வலியுறுத்தியுள்ளது. நிதியத்தின் மூலதன நிதியை (Corpus Fund) விரிவுபடுத்துவதன் மூலம், மேலும் பல திட்டங்களுக்கு ஆதரவளிக்கவும், இலங்கை மற்றும் இந்திய மக்களுக்கு இடையிலான தொடர்புகளை மேலும் மேம்படுத்துவதற்கான வாய்ப்புகளை வழங்கவும் முடியும் என சபை தெரிவித்துள்ளது.
1998ஆம் ஆண்டு இரு நாடுகளின் அரசாங்கங்களுக்கு இடையிலான ஒப்பந்தத்தின் மூலம் நிறுவப்பட்ட இந்த அறக்கட்டளை, பொருளாதாரம், விஞ்ஞானம், கல்வி, தொழில்நுட்பம் மற்றும் கலாசாரம் உள்ளிட்ட துறைகளில் ஒத்துழைப்பை ஊக்குவிப்பதன் மூலம் இருதரப்பு உறவுகளை மேம்படுத்தி வருகிறது.
அத்துடன், மாணவர்கள், கல்வியாளர்கள், ஆய்வாளர்கள், தொழில்துறை நிபுணர்கள் மற்றும் கலைஞர்கள் உள்ளிட்டோருக்கு இடையிலான பரிமாற்றங்களுக்கும் இந்த அறக்கட்டளை ஆதரவளித்து வருகிறது.இந்தக் கூட்டத்தில் பணிப்பாளர் சபை உறுப்பினர்களான பிரசாத் கரியவாசம், மோகன் குமார் மற்றும் அசோக் மலிக் ஆகியோரும் கலந்துகொண்டனர்.









