புதிய கல்வியாண்டு தொடங்கியுள்ள நிலையில், ஆக்கிரமிக்கப்பட்ட மேற்குக் கரையின் மசாஃபர் யத்தா பகுதியில் உள்ள குழந்தைகள், தங்களது பள்ளிகள் தொடர்ந்து நிலைத்திருக்குமா என்ற அச்சத்துடன் கல்விக்குத் திரும்புகின்றனர்.
தெற்கு ஆக்கிரமிக்கப்பட்ட மேற்குக் கரையில் உள்ள மசாஃபர் யத்தா பகுதியில், ஃபரா, முகமது மற்றும் ஜவாத் ஆகியோர் புதிய கல்வியாண்டுக்குத் தயாராகி வருகின்றனர்.17, 8 மற்றும் 7 வயதுடைய இக்குழந்தைகள், அதே பெயரைக் கொண்ட கிராமத்தில் அமைந்துள்ள ஷஅப் அல்-புதும் பள்ளியில் கல்வி கற்கின்றனர். ஆனால், ஆகஸ்ட் 4ஆம் திகதி இஸ்ரேலியப் படைகள் பள்ளியின் இரண்டு நிர்வாக அறைகளையும் ஒரு களஞ்சிய அறையையும் இடித்துத் தள்ளியுள்ளதால், அவர்கள் திரும்பிச் செல்லும் பள்ளிக் கட்டிடம் தற்போது அவற்றை இழந்த நிலையில் உள்ளது.

ஐக்கிய நாடுகள் சபையின் தகவலின்படி, இஸ்ரேலிய தரப்பு, இக்கட்டமைப்புகள் இஸ்ரேலால் வழங்கப்படும் கட்டிட அனுமதியின்றி நிர்மாணிக்கப்பட்டதாகக் கூறி இடிப்பை நியாயப்படுத்தியுள்ளது. ஆக்கிரமிக்கப்பட்ட மேற்குக் கரையின் இஸ்ரேலிய நிர்வாக மற்றும் இராணுவக் கட்டுப்பாட்டில் உள்ள ‘Area C’ பகுதியில் பாலஸ்தீனியர்கள் இத்தகைய அனுமதிகளைப் பெறுவது மிகவும் கடினமானதாகும்.
பள்ளியின் எஞ்சிய பகுதியும் பாதுகாப்பாக இல்லை. அதுவும் இடிக்கப்படும் அபாயத்தில் உள்ளது. இது தொடர்பான வழக்கு செப்டம்பர் 15ஆம் திகதி விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்படவுள்ளது.
இதனால், குழந்தைகளின் கல்விக்குத் திரும்பும் நிலைமை தற்போது நிச்சயமற்றதாகியுள்ளது. கிராமத்தின் ஒரே பள்ளியையும் முழுமையாக இழந்துவிடுவோமோ என்றும், இஸ்ரேலியப் படைகளுடன் மேலும் மோதல்கள் ஏற்படுமோ என்றும் அவர்கள் அஞ்சுகின்றனர்.

தொடரும் அச்சம்!
செப்டம்பர் தொடக்கத்தில் கல்வியாண்டு ஆரம்பிப்பது என்பது மாணவர்கள் மீண்டும் கல்விக்குத் திரும்புவதற்கான மகிழ்ச்சியான தருணமாக இருக்க வேண்டும். ஆனால், ஷஅப் அல்-புதும் கிராமத்தில் அந்த எதிர்பார்ப்பு தற்போது கவலையுடன் கலந்துள்ளது.
பள்ளிதான் இதுவரை கல்வி கற்ற ஒரே இடம் என ஃபரா அல் ஜசீராவிடம் தெரிவித்ததாக அல் ஜசீரா கூறியுள்ளது, இனி என்ன நடக்கும் என்ற அச்சத்தையும் வெளிப்படுத்தியிள்ளார்.
முகமதுவும் தனது அச்சத்தை வெளிப்படுத்தியதுடன், இஸ்ரேலியப் படைகள் மீண்டும் வந்து “பள்ளியில் எஞ்சியிருப்பதையும் இடித்துத் தள்ளிவிடுவார்களோ” என கவலைப்படுவதாகக் கூறினார்.
இதனிடையே, பள்ளி சேதப்படுத்தப்பட்டுள்ளதைப் பார்த்து தான் வருத்தமடைந்ததாக ஜவாத் தெரிவித்தார். மேலும், பள்ளி மீண்டும் “முன்பு இருந்த நிலைக்குத் திரும்ப வேண்டும்” என தான் நம்புவதாகக் கூறினார்.
மசாஃபர் யத்தா உள்ளூராட்சி சபையின் தலைவர் நிதால் யூனிஸின் கருத்துப்படி, குழந்தைகளின் இந்த அச்சம், அந்தப் பகுதியில் கல்வித்துறை எதிர்கொள்ளும் மிகப் பரந்த அச்சுறுத்தலின் ஒரு பகுதியாகும். மசாஃபர் யத்தா பல ஆண்டுகளாக இஸ்ரேலிய அரசாலும் குடியேற்றவாசிகளாலும் இலக்கு வைக்கப்பட்டு வருகிறது.
1980களில் மசாஃபர் யத்தா பகுதி இஸ்ரேலிய இராணுவத்தின் மூடப்பட்ட பயிற்சி மற்றும் துப்பாக்கிச் சூட்டுப் பகுதியாக அறிவிக்கப்பட்டது. இதனைப் பயன்படுத்தி அங்குள்ள பாலஸ்தீனியர்களை வெளியேற்றுவதற்கான முயற்சிகள் மீண்டும் மீண்டும் மேற்கொள்ளப்பட்டுள்ளன.
“ஆக்கிரமிப்பு அதிகாரிகளின் முன்னெப்போதும் இல்லாத அளவிலான நடவடிக்கைகளுக்கு மத்தியில், ஒவ்வொரு கல்வியாண்டிலும் இது மீண்டும் ஒரு சோதனையாக மாறியுள்ளது” என யூனிஸ் அல் ஜசீராவிடம் தெரிவித்தார்.
“இந்த ஆண்டு பள்ளிகளை இடிக்கும் ஆக்கிரமிப்பு அதிகாரிகளின் கொள்கை தீவிரமடைந்துள்ளதுடன், இந்தக் கிராமங்களில் உள்ள அனைத்தையும் இலக்காகக் கொண்ட குடியேற்றவாசிகளின் வன்முறையும் அதிகரித்துள்ளது” என அவர் மேலும் தெரிவித்தார்.
இந்த வன்முறை குழந்தைகளின் அன்றாட வாழ்க்கையிலும் தொடர்வதாகக் கூறிய யூனிஸ், “பள்ளிக்குச் செல்லும் மாணவர்கள், வகுப்பறையில் இருக்கும் மாணவர்கள், ஏன் வீடுகளுக்குள்ளேயே இருக்கும் மாணவர்கள்கூட” இலக்காகப்படுவதாகத் தெரிவித்தார்.
மசாஃபர் யத்தா பகுதியிலுள்ள ஏழு பள்ளிகளும் தற்போது இடிக்கப்படும் அச்சுறுத்தலை எதிர்கொள்வதாக யூனிஸ் கூறினார்.
“இந்தக் கல்வியாண்டின் இறுதி வரை இந்தப் பள்ளிகள் உயிருடன் இருக்குமா என்பது எங்களுக்குத் தெரியாது. அடுத்த கல்வியாண்டு தொடங்கும்போதாவது அவை இன்னும் நிலைத்திருக்குமா என்பதும் தெரியாது” என அவர் கூறினார்.
இருப்பினும், வலியையும் “இஸ்ரேலியக் கொடூரத்தையும்” எதிர்கொண்ட போதிலும், அப்பகுதியை விட்டு வெளியேறாமல் தொடர்ந்து அங்கேயே வாழ வேண்டும் என்ற உள்ளூர் பாலஸ்தீனியர்களின் உறுதியையும் அவர் வலியுறுத்தினார்.
குடியேற்றவாசிகளின் வன்முறை!
இடிப்பு தொடர்பான நிச்சயமற்ற நிலை மற்றும் குடியேற்றக் குடியிருப்புகள் தொடர்ந்து விரிவடைந்து வருவது, அப்பகுதி மக்களிடையே பாதுகாப்பற்ற உணர்வை மேலும் அதிகரித்துள்ளதாக செயற்பாட்டாளரும் ஆசிரியருமான தாரிக் ஹத்தலீன் தெரிவித்தார்.
“புல்டோசர்கள் எப்போது வரும் என்பதை ஆக்கிரமிப்பு அதிகாரிகள் பொதுவாக குடியிருப்பாளர்களுக்கோ அல்லது பள்ளி நிர்வாகத்திற்கோ முன்கூட்டியே தெரிவிப்பதில்லை” என ஹத்தலீன் அல் ஜசீராவிடம் கூறினார்.
முந்தைய கல்வியாண்டில் ஜோர்டான் பள்ளத்தாக்கில் உள்ள ராஸ் ஐன் அல்-அவ்ஜா பள்ளிக்குள் குடியேற்றவாசிகள் நுழைந்து, ஆசிரியர்கள் மற்றும் மாணவர்களைத் தாக்கியதாகவும் அவர் தெரிவித்தார்.
இந்தத் தாக்குதலும் பள்ளி இடிப்பும், பள்ளிகள் இனி தாக்குதல்களிலிருந்து பாதுகாப்பான இடங்களாக இல்லை என்பதை உறுதிப்படுத்தியுள்ளதாக அவர் கூறினார்.
“இஸ்ரேலின் நடவடிக்கைகள் ஒரு விடயத்தை மட்டும் இலக்காகக் கொண்டவை அல்ல. அவை கல்வி, வீடமைப்பு, சுதந்திரமான நடமாட்டம் மற்றும் வாழ்வாதாரங்கள் உள்ளிட்ட பல்வேறு அம்சங்களைப் பாதிக்கின்றன” என ஹத்தலீன் தெரிவித்தார்.
பாலஸ்தீன கல்வி அமைச்சினால் பின்தங்கிய மற்றும் விளிம்புநிலைப் பகுதிகளுக்குச் சேவை செய்வதற்காக அமைக்கப்பட்டுள்ள இந்தப் பள்ளிகள் “வெறும் கல்விக் கட்டிடங்கள் அல்ல” என்றும் அவர் குறிப்பிட்டார்.
திட்டமிட்ட நடவடிக்கையின் ஒரு பகுதியாகும்!
காலனித்துவமயமாக்கல் மற்றும் சுவர் எதிர்ப்பு ஆணையத்தின் புள்ளிவிவரங்கள் இந்த அச்சுறுத்தலின் அளவை வெளிப்படுத்துகின்றன. சுமார் 13,000 மாணவர்களுக்கு கல்வி வழங்கும் 84 பாலஸ்தீனியப் பள்ளிகள், தற்போது இஸ்ரேலிய இடிப்பு உத்தரவுகள் அல்லது கட்டுமானப் பணிகளை நிறுத்துவதற்கான உத்தரவுகளை எதிர்கொள்கின்றன.
ஆணையத்தின் மூத்த அதிகாரியான அமீர் தாவூத் கூறுகையில், உடனடி சட்டரீதியான அச்சுறுத்தல்களை எதிர்கொள்ளும் பள்ளிகள் பெரும்பாலும் தெற்கு ஹெப்ரோன் பகுதியில், குறிப்பாக மசாஃபர் யத்தாவில் அமைந்துள்ளன. பெத்லகேமுக்கு அருகிலுள்ள அல்-வலாஜா பள்ளியும் இஸ்ரேலின் கட்டிட அனுமதி தொடர்பான குற்றச்சாட்டை எதிர்கொள்கிறது.
“இந்தப் பள்ளிகளை வெறுமனே மூடிவிட்டு, அங்குள்ள மாணவர்களை வேறு இடங்களுக்கு எளிதாக மாற்றிவிட முடியாது” என தாவூத் அல் ஜசீராவிடம் தெரிவித்தார்.
இடிப்பு உத்தரவுகளின் தாக்கம், கட்டிடம் உண்மையில் இடிக்கப்படுவதற்கு முன்பே தொடங்கிவிடுகிறது. இது மாணவர்கள், ஆசிரியர்கள் மற்றும் அவர்களது குடும்பங்களிடையே நிச்சயமற்ற தன்மையையும் கல்வித் தடைகளையும் உருவாக்குகிறது என அவர் கூறினார்.
“புல்டோசர் வரும் முன்பே உளவியல் மற்றும் கல்வி ரீதியான தாக்கம் தொடங்கிவிடுகிறது” என அவர் தெரிவித்தார்.
“இது தனிப்பட்ட சம்பவங்களைத் தாண்டிய ஒரு திட்டமிட்ட நடவடிக்கையாகும்” என தாவூத் கூறினார்.
கட்டுமானத் திட்டமிடல் மீதான கட்டுப்பாடுகள், சாலைப் பயணக் கட்டுப்பாடுகள் மற்றும் குடியேற்றவாசிகளின் தாக்குதல்கள் ஆகியவற்றுடன் இந்த நடவடிக்கைகள் தொடர்வதாகவும் அவர் குறிப்பிட்டார்.“இது பள்ளிக் கட்டிடங்களை மட்டும் அச்சுறுத்தவில்லை. பாலஸ்தீனிய சமூகங்கள் தொடர்ந்து வாழ்வதற்கான அவர்களின் திறனையே இது இலக்காகக் கொண்டுள்ளது” என அவர் தெரிவித்தார்.
அப்ரா அன்ஸார்











