முன்னாள் பாகிஸ்தான் பிரதமரும் கிரிக்கெட் ஜாம்பவானுமான இம்ரான் கானுக்கு மனிதாபிமான அடிப்படையில் சிகிச்சை வழங்கப்பட வேண்டும் எனக் கோரி, அவுஸ்திரேலிய கிரிக்கெட் வீரர் பாட் கம்மின்ஸ் குரல் எழுப்பியுள்ளார்.
நீதிமன்றத்தால் உத்தரவிடப்பட்டுள்ள மருத்துவப் பரிசோதனைகள் முன்னெடுக்கப்படுவதுடன், இம்ரான் கானின் குடும்பத்தினருடனான சந்திப்புகளும் தொடர்ந்து அனுமதிக்கப்பட வேண்டும் என அவர் வலியுறுத்தியுள்ளார்.
“எவரும் பெறத் தகுதியான கண்ணியத்துடன் இம்ரான் கான் நடத்தப்படுவார் என நம்புகிறேன்” என பாட் கம்மின்ஸ் தெரிவித்துள்ளார்.
இதனிடையே, முன்னாள் அவுஸ்திரேலிய அணித் தலைவர் கிரெக் சேப்பலும் இம்ரான் கானின் உடல்நிலை மற்றும் சிறையில் அவர் தனிமைப்படுத்தப்பட்டிருப்பது குறித்து தீவிர கவலை வெளியிட்டுள்ளார்.
The Grade Cricketer போட்காஸ்டில் பேசிய சேப்பல், ஆறு ஆண்டுகளுக்கு முன்னர் தான் சந்தித்தபோது இருந்த வலிமையான, ஆரோக்கியமான தோற்றம் தற்போது இம்ரான் கானிடம் இல்லை எனத் தெரிவித்துள்ளார்.
“அவரது வலது கண்ணில் பார்வைக் குறைபாடு ஏற்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது. அவர் சிரமப்படுகிறார். அவர் மூன்று ஆண்டுகளாக தனிமைப்படுத்தப்பட்டுள்ளார்” என சேப்பல் குறிப்பிட்டுள்ளார்.
இம்ரான் கானுடன் விளையாடிய காலத்தில் நெருங்கிய நட்பை வளர்த்துக்கொண்ட சேப்பல், குடும்பத்தினருடன் தொடர்பு கொள்ள முடியாத நிலையும் நீண்டகால தனிமையும் அவரது மனநலத்தில் தாக்கத்தை ஏற்படுத்துவதாகத் தெரிவித்துள்ளார்.
மேலும், இம்ரான் கானுக்கு புத்தகங்களை வாசிக்க அனுமதி வழங்கப்படவில்லை என்றும், பெரும்பாலான நேரத்தை இருளில் கழிப்பதாகவும் கூறிய அவர், இத்தகைய சூழ்நிலைகள் அவரது மன மற்றும் உடல் நலத்திற்கு பாதிப்பை ஏற்படுத்துவதாக எச்சரித்துள்ளார்.
இம்ரான் கான் 2023ஆம் ஆண்டு முதல் சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். அவர் மறுத்துவரும் ஊழல் குற்றச்சாட்டில் 14 ஆண்டுகள் சிறைத்தண்டனை அனுபவித்து வருகிறார்.
சமீபத்தில் வெளியான காணொளியொன்றில், மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லப்பட்டபோது இம்ரான் கான் சக்கர நாற்காலியில் அழைத்துச் செல்லப்படுவது பதிவாகியிருந்தது. இதனால் அவரது உடல்நிலை குறித்த கவலைகள் மேலும் அதிகரித்துள்ளன.
இந்த நிலையில், இந்தியாவின் சுனில் கவாஸ்கர், கபில் தேவ், திலீப் வெங்சர்கர் உள்ளிட்ட 22 முன்னாள் சர்வதேச கிரிக்கெட் வீரர்கள் பாகிஸ்தான் பிரதமர் ஷெஹ்பாஸ் ஷெரீஃபுக்கு கடிதம் எழுதியுள்ளனர்.
அதில் இம்ரான் கானுக்கு மனிதாபிமான அடிப்படையிலான சிகிச்சை, சுயாதீன மருத்துவப் பரிசோதனை மற்றும் உரிய மருத்துவ பராமரிப்பு வழங்கப்பட வேண்டும் என அவர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
2018 முதல் 2022 வரை பாகிஸ்தானின் 22ஆவது பிரதமராக பதவி வகித்த இம்ரான் கான், அந்நாட்டின் மிகப் பிரபலமான சகலதுறை கிரிக்கெட் வீரர்களில் ஒருவராகவும் திகழ்கிறார். 1992ஆம் ஆண்டு பாகிஸ்தான் தனது முதல் உலகக் கிண்ணத்தை வென்றபோது, அணிக்கு தலைமை தாங்கியவர் இம்ரான் கான் ஆவார்.








