அகில இலங்கை இளைஞர் முஸ்லிம் சங்கங்களின் சம்மேளனத்தின் (YMMA) 76ஆவது வருடாந்த மீலாதுன் நபி விழா, நபிகள் நாயகம் முஹம்மது (ஸல்) அவர்களின் பிறப்பை நினைவுகூரும் வகையில் கொழும்பில் நடைபெற்றது. கொழும்பில் உள்ள YMMA தலைமையகத்தின் டாக்டர் ஏ.எம்.ஏ. அஸீஸ் கேட்போர் கூடத்தில் நேற்று (26) புதன்கிழமை இந்த நிகழ்வு நடைபெற்றது.
அகில இலங்கை YMMA சம்மேளனத்தின் தேசியத் தலைவர் எம்.ஆர்.எம். ஸியாத் மற்றும் நிறைவேற்றுக் குழு உறுப்பினர்களின் அனுசரணையில் விழா ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது . நிகழ்வில் பிரதான உரையாற்றிய அஷ்-ஷெய்க் முஃப்தி எம்.ஸட்.எம். முஸ்தபா ரஸா (அல்-ஆலிம், அல்-ஃபாதில்), நபிகள் நாயகம் முஹம்மது (ஸல்) அவர்கள் முழு மனிதகுலத்திற்கும் அருளாக அனுப்பப்பட்டவர் எனக் குறிப்பிட்டார்.
ஒவ்வொருவரும் ஏனையவர்களிடம் அன்பு, இரக்கம் மற்றும் கருணையுடன் நடந்துகொள்ள வேண்டும் என வலியுறுத்திய அவர், முஸ்லிம் சமூகத்திற்குள் ஒற்றுமை மேலும் வலுப்படுத்தப்பட வேண்டியதன் அவசியத்தையும் எடுத்துரைத்தார். தற்போதைய சமூகத்தில் ஒருவருக்கொருவர் இடையே இரக்கமும் புரிந்துணர்வும் குறைந்து வருவதாக சுட்டிக்காட்டிய அவர், பெரியவர்கள் இளைய தலைமுறையினரிடம் அன்புடனும் கருணையுடனும் நடந்துகொள்ள வேண்டும் என்றும், இளையவர்கள் பெரியவர்களுக்கு உரிய மரியாதையை வழங்க வேண்டும் என்றும் வலியுறுத்தினார்.












