சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெய் விலையில் ஏற்பட்டுள்ள சரிவின் பலனை இலங்கை மக்களுக்கும் வழங்கும் வகையில், நாட்டில் எரிபொருள் விலையைக் குறைக்க அரசாங்கம் உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என திருகோணமலை மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் இம்ரான் மகரூப் வலியுறுத்தியுள்ளார்.
கிண்ணியாவில் நடைபெற்ற மக்கள் சந்திப்பொன்றில் கலந்துகொண்டு உரையாற்றியபோதே அவர் இதனைத் தெரிவித்துள்ளார்.
ஈரான் மற்றும் ஓமான் இடையே எட்டப்பட்டுள்ள உடன்பாடுகளையடுத்து, ஹோர்முஸ் நீரிணை ஊடான கப்பல் போக்குவரத்து சுமுகமடைந்துள்ளதாகவும், இதன் காரணமாக சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெய் விலை கணிசமாகக் குறைந்து வருவதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
சர்வதேச சந்தையில் எண்ணெய் விலை அதிகரிக்கும் சந்தர்ப்பங்களில் அதன் தாக்கத்தை உடனடியாக மக்கள் மீது சுமத்தி உள்நாட்டில் எரிபொருள் விலையை உயர்த்தும் அரசாங்கம், தற்போது உலக சந்தையில் விலை குறைந்துள்ள நிலையில் அதன் பலனை மக்களுக்கு வழங்குவதில் தாமதிப்பது ஏன் எனவும் அவர் கேள்வியெழுப்பியுள்ளார்.
நாட்டில் தற்போது நிலவும் பொருளாதார சூழ்நிலையில் எரிபொருள் விலை குறைக்கப்பட்டால், அத்தியாவசியப் பொருட்களின் விலைகள், போக்குவரத்துக் கட்டணங்கள் மற்றும் மீனவர்கள், விவசாயிகளின் உற்பத்திச் செலவுகள் உள்ளிட்டவை குறைவடைய வாய்ப்புள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.
எனவே, சர்வதேச சந்தை நிலவரத்துக்கு ஏற்ப இலங்கையிலும் எரிபொருள் விலையைக் குறைத்து, பொதுமக்களுக்கு உடனடி நிவாரணத்தை வழங்க அரசாங்கம் விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என பாராளுமன்ற உறுப்பினர் இம்ரான் மகரூப் வலியுறுத்தியுள்ளார்.









