கொழும்பில் நடைபெற்ற இந்தியா – இலங்கை அணிகளுக்கு இடையிலான இரண்டாவது டெஸ்ட் போட்டியில், இலங்கை அணி அபாரமான போராட்டத்தை வெளிப்படுத்தி போட்டியை சமநிலையில் முடித்துள்ளது.
முதல் இன்னிங்ஸில் 213 ஓட்டங்கள் பின்தங்கிய போதிலும், இலங்கை வீரர்களின் பொறுப்பான ஆட்டத்தால் இன்னிங்ஸ் தோல்வியைத் தவிர்த்து போட்டியை டிராவில் முடித்தது.
போட்டியின் முதல் இன்னிங்ஸில் ஆதிக்கம் செலுத்திய இந்திய அணி, 9 விக்கெட் இழப்புக்கு 503 ஓட்டங்களைப் பெற்ற நிலையில் தனது இன்னிங்ஸை இடைநிறுத்தியது. இந்திய அணிக்காக தேவ்தத் படிக்கல் 117 ஓட்டங்களையும், துருவ் ஜூரெல் ஆட்டமிழக்காமல் 115 ஓட்டங்களையும் பெற்று சதம் விளாசினர்.
இதற்குப் பதிலளித்த இலங்கை அணி 290 ஓட்டங்களுக்கு சகல விக்கெட்டுகளையும் இழந்தது. இலங்கை அணிக்காக இளம் வீரர் சொனல் தினுச 103 ஓட்டங்களைப் பெற்று சதம் அடித்த போதிலும், அணி 213 ஓட்டங்கள் பின்தங்கியது. இதையடுத்து இந்திய அணி இலங்கைக்கு ‘ஃபாலோ-ஆன்’ வழங்கியது.
இரண்டாவது இன்னிங்ஸில் இலங்கை அணி 218 ஓட்டங்களுக்கு 6 விக்கெட்டுகளை இழந்து இன்னிங்ஸ் தோல்வியின் விளிம்பில் இருந்தது.
எனினும், பசிந்து சூரியபண்டார 92 ஓட்டங்களையும், கமிந்து மெந்திஸ் 55 ஓட்டங்களையும் பெற்று அணியின் மீட்சிக்கு அடித்தளமிட்டனர்.
கடைசி நாள் ஆட்டத்தில் மீண்டும் பொறுப்புடன் துடுப்பெடுத்தாடிய சொனல் தினுச, கேசர நுவந்தவுடன் இணைந்து 7ஆவது விக்கெட்டுக்கு 112 ஓட்டங்களைப் பகிர்ந்து கொண்டார். நுவந்த 46 ஓட்டங்களைப் பெற்று சிறந்த ஒத்துழைப்பை வழங்கினார்.
முதல் இன்னிங்ஸில் சதம் அடித்திருந்த சொனல் தினுச, இரண்டாவது இன்னிங்ஸிலும் அபாரமாகத் துடுப்பெடுத்து 133 ஓட்டங்களுடன் ஆட்டமிழக்காமல் இருந்து இலங்கை அணியை தோல்வியிலிருந்து மீட்டார்.
ஆட்ட நேர முடிவில் இலங்கை அணி 154 ஓவர்களில் 9 விக்கெட் இழப்புக்கு 429 ஓட்டங்களைப் பெற்றிருந்த நிலையில் போட்டி சமநிலையில் முடிவடைந்தது.
ஒரே டெஸ்ட் போட்டியின் இரண்டு இன்னிங்ஸ்களிலும் சதம் அடித்து சொனல் தினுச வெளிப்படுத்திய வரலாற்றுச் சிறப்புமிக்க போராட்டமே, இலங்கை அணி இன்னிங்ஸ் தோல்வியிலிருந்து தப்பி போட்டியை சமநிலையில் முடிப்பதற்கு முக்கிய காரணமாக அமைந்தது.









