கொழும்பில் இந்தியாவுக்கு எதிராக நடைபெற்று வரும் இரண்டாவது டெஸ்ட் போட்டியில், இலங்கை அணியின் இளம் வீரர் சொனல் தினுச இரண்டாவது இன்னிங்ஸிலும் சதம் விளாசி அணியை இன்னிங்ஸ் தோல்வியின் பிடியிலிருந்து மீட்டுள்ளார்.
இந்தப் போட்டியில் முதல் இன்னிங்ஸில் இந்திய அணி 9 விக்கெட் இழப்புக்கு 503 ஓட்டங்களைப் பெற்று ஆட்டத்தை இடைநிறுத்தியது. இதற்குப் பதிலளித்த இலங்கை அணி 290 ஓட்டங்களுக்கு சகல விக்கெட்டுகளையும் இழந்ததால், 213 ஓட்டங்கள் பின்தங்கிய நிலையில் ‘ஃபாலோ-ஆன்’ முறையில் இரண்டாவது இன்னிங்ஸைத் தொடங்கியது.
இரண்டாவது இன்னிங்ஸிலும் இலங்கை அணியின் முன்வரிசை வீரர்கள் அடுத்தடுத்து ஆட்டமிழந்த நிலையில், அணியை சரிவிலிருந்து மீட்கும் பொறுப்பை சொனல் தினுச ஏற்றுக்கொண்டார்.
நிதானமாகவும் பொறுப்புடனும் துடுப்பெடுத்தாடிய அவர், 208 பந்துகளை எதிர்கொண்டு 6 பவுண்டரிகளுடன் 101 ஓட்டங்களைப் பெற்று ஆட்டமிழக்காமல் களத்தில் உள்ளார்.
முதல் இன்னிங்ஸிலும் 103 ஓட்டங்களைப் பெற்று சதம் அடித்திருந்த சொனல் தினுச, இரண்டாவது இன்னிங்ஸிலும் சதம் விளாசியதன் மூலம் ஒரே டெஸ்ட் போட்டியின் இரண்டு இன்னிங்ஸ்களிலும் சதம் அடித்த சாதனையைப் பதிவு செய்துள்ளார்.
இலங்கை அணி இக்கட்டான நிலையில் இருந்தபோது கீழ்வரிசை வீரர் கேசர நுவந்தவுடன் இணைந்து விளையாடிய தினுச, 7ஆவது விக்கெட்டுக்கு 112 ஓட்டங்களைச் சேர்த்து அணியின் நிலையை மாற்றியமைத்தார். நுவந்த 46 ஓட்டங்களைப் பெற்று தினுசவுக்கு சிறந்த ஒத்துழைப்பை வழங்கினார்.
136 ஓவர்கள் நிறைவில் இலங்கை அணி 8 விக்கெட் இழப்புக்கு 387 ஓட்டங்களைப் பெற்றுள்ளது.
இதன் மூலம் இலங்கை அணி தற்போது இந்திய அணியை விட 174 ஓட்டங்கள் முன்னிலையில் உள்ளது. சொனல் தினுசவின் பொறுப்பான ஆட்டத்தால் இலங்கை அணி இன்னிங்ஸ் தோல்வியைத் தவிர்த்து, போட்டியை சமநிலையில் முடிக்கும் வாய்ப்பை நோக்கி முன்னேறியுள்ளது.









