பூனாகலை, கபரகலை தோட்டத்தைச் சேர்ந்த 50 குடும்பங்களுக்காக நிர்மாணிக்கப்பட்ட “நவோதயாகம” வீடமைப்புத் திட்டத்தின் கீழ் அமைக்கப்பட்ட 50 வீடுகள் எதிர்வரும் 28ஆம் திகதி உரிமையாளர்களிடம் கையளிக்கப்படவுள்ளன.
ஒவ்வொரு குடும்பத்திற்கும் தலா 10 பேர்ச்சஸ் காணியும், 550 சதுர அடி பரப்பளவு கொண்ட வீடும் வழங்கப்படவுள்ளது.
ஒரு வீட்டை நிர்மாணிப்பதற்காக சுமார் 32 இலட்சம் ரூபாய் செலவிடப்பட்டுள்ளது. இரண்டு படுக்கையறைகள், வரவேற்பறை, சமையலறை மற்றும் குளியலறை ஆகியவற்றைக் கொண்ட இவ்வீடுகள், குறித்த குடும்பங்கள் பாதுகாப்பானதும் கௌரவமானதுமான வாழ்க்கையை முன்னெடுப்பதற்கான அடித்தளத்தை ஏற்படுத்தியுள்ளன.
புதிய வீடுகளில் குடியேறவுள்ள குடும்பங்களுக்குத் தேவையான தளபாடங்கள், வீட்டு உபகரணங்கள் மற்றும் சமையலறை உபகரணங்கள் உள்ளிட்ட அத்தியாவசியப் பொருட்கள் சுமார் 175,000 ரூபாய் பெறுமதியில் நேற்று (25) வழங்கி வைக்கப்பட்டன.
பெருந்தோட்ட மற்றும் சமூக உட்கட்டமைப்பு அமைச்சர் சமந்த வித்யாரத்ன மற்றும் பிரதி அமைச்சர் சுந்தரலிங்கம் பிரதீப் ஆகியோரின் தலைமையில் இந்த வேலைத்திட்டம் முன்னெடுக்கப்பட்டது.









