அவுஸ்திரேலியாவின் மெல்போர்னில் இருந்து கொழும்பு பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலையத்திற்கு (BIA) Jetstar Airways நிறுவனத்தின் முதலாவது விமானம் நேற்று ஆகஸ்ட் 25ஆம் திகதி செவ்வாய்க்கிழமை வருகை தந்தது.
இதன்மூலம் மெல்போர்னிலிருந்து இயங்கும் Jetstar நிறுவனத்தின் 10ஆவது சர்வதேச விமானப் பாதையாக கொழும்பு இணைந்துள்ளது. மெல்போர்ன் மற்றும் கொழும்பு இடையே வாரத்திற்கு மூன்று விமான சேவைகள் முன்னெடுக்கப்படவுள்ளன.
முதலாவது விமானத்தின் வருகையை முன்னிட்டு, Airport & Aviation Services Sri Lanka (Private) Limited ஏற்பாடு செய்திருந்த நீர்த்தாரை மரியாதையுடன் விமானம் வரவேற்கப்பட்டது. இதனைத் தொடர்ந்து, இலங்கையின் பாரம்பரியத்தையும் கலாசார செழுமையையும் வெளிப்படுத்தும் வகையில், Tourism Sri Lanka ஏற்பாடு செய்திருந்த கண்டிய நடன நிகழ்வும் இடம்பெற்றது.
Jetstar நிறுவனத்தின் இலங்கை விமான சேவை ஆரம்பிக்கப்பட்டதை அடையாளப்படுத்தும் வகையில், சிறப்பு கேக் வெட்டும் நிகழ்வும் நடைபெற்றது.
இலங்கைக்கு வருகை தந்த பயணிகளுக்கு அன்பான இலங்கை விருந்தோம்பலுடன் வரவேற்பு அளிக்கப்பட்டதுடன், இலங்கை தேயிலை சபையின் அனுசரணையில் சிலோன் தேயிலைப் பொதிகளும் வழங்கப்பட்டன.
இது இலங்கையின் அழகையும் விருந்தோம்பலையும் அறிமுகப்படுத்தும் இனிய வரவேற்பாக அமைந்தமை குறிப்பிடத்தக்கது.









