ஹோர்முஸ் நீரிணையின் பாதுகாப்பு மற்றும் முன்னேற்றத்தை உறுதி செய்வதற்கான மூலோபாய நடவடிக்கைத் திட்டத்தின் 3ஆவது சரத்தை ஈரான் நாடாளுமன்றத்தின் தேசிய பாதுகாப்பு மற்றும் வெளிவிவகாரக் குழு அங்கீகரித்துள்ளது.
இதன்படி, ஹோர்முஸ் நீரிணை வழியாகச் செல்ல அனுமதிக்கப்படும் நாடுகளுக்குச் சொந்தமான கப்பல்களிடம் ஈரான் வழங்கும் பல்வேறு சேவைகளுக்கான கட்டணம் அறவிடப்படவுள்ளது.
ஈரானின் அரச செய்தி நிறுவனமான IRNA மேற்கோளிட்டுள்ள தேசிய பாதுகாப்பு மற்றும் வெளிவிவகாரக் குழுவின் பேச்சாளர் ஹசன் கஷ்காவி, கடல்சார் சேவைகள், சுற்றுச்சூழல் சேவைகள், விசேட சூழ்நிலைகளில் எரிபொருள் வழங்கல், காப்புறுதி, பாதுகாப்பு உள்ளிட்ட சேவைகளுக்காக கட்டணம் அறவிடப்படும் எனத் தெரிவித்துள்ளார்.
இந்தக் கட்டணங்கள் ஹோர்முஸ் நீரிணையை கடக்க அனுமதிக்கப்பட்ட நாடுகளின் கப்பல்களிடமிருந்து அறவிடப்பட்டு, ஈரானிய ரியாலில் அல்லது தெஹ்ரான் தீர்மானிக்கும் வேறு நாணயத்தில் செலுத்தப்பட வேண்டும் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.
மேலும், பாரசீக வளைகுடா மற்றும் ஹோர்முஸ் நீரிணைக்கு தனித்துவமான விதிமுறைகள் மற்றும் நிலைமைகள் உள்ளதாகவும், 1982ஆம் ஆண்டு கடல் சட்டம் தொடர்பான ஐக்கிய நாடுகள் சபையின் மாநாட்டை ஏற்றுக்கொண்ட பின்னரும், அந்த மாநாட்டின் விதிகள் தமது தேசிய இறையாண்மை மற்றும் தேசிய பாதுகாப்பை பாதிக்கக் கூடாது என ஓமான் அரசியல் பிரகடனம் ஒன்றை வெளியிட்டதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
ஹோர்முஸ் நீரிணையை ஒட்டியுள்ள நாடுகளின் உரிமைகளும் இந்த சட்டமூலத்தில் கருத்தில் கொள்ளப்பட்டுள்ளதாக கஷ்காவி மேலும் தெரிவித்துள்ளார்.








