உலகப் புகழ்பெற்ற கன்ட்ரி இசைக் கலைஞரும் பாடலாசிரியருமான டோலி பார்ட்டன் தனது 80வது வயதில் காலமானார்.
அவரது மறைவு குறித்த தகவலை குடும்பத்தினர், டோலி பார்ட்டனின் அதிகாரப்பூர்வ சமூக வலைத்தளப் பக்கங்கள் மூலம் அறிவித்துள்ளனர். அவரது சகோதரியின் மகனான பிரையன் சீவர் இந்த அறிவிப்பை வெளியிட்டுள்ளார்.
கிட்டத்தட்ட ஏழு தசாப்தங்களாக இசைத்துறையில் பயணித்த டோலி பார்ட்டன், 10 கிராமி விருதுகளை வென்றுள்ளதுடன், உலகளவில் 100 மில்லியனுக்கும் அதிகமான இசைத்தட்டுகளை விற்பனை செய்துள்ளார்.
‘Jolene’, ‘I Will Always Love You’, ‘9 to 5’ உள்ளிட்ட உலகப் புகழ்பெற்ற பல பாடல்களை இயற்றிய அவர், தன்னை முதன்மையாக ஒரு பாடலாசிரியராகவே அடையாளப்படுத்திக் கொண்டிருந்தார்.
பாடல் எழுதுவது தனது எண்ணங்களையும் உணர்வுகளையும் வெளிப்படுத்துவதற்கான ஒரு வழியாகவும், தனக்கான ஒரு வகையான ‘சிகிச்சையாகவும்’ இருந்ததாக அவர் பல சந்தர்ப்பங்களில் தெரிவித்துள்ளார்.
இசைத்துறையைத் தாண்டி நடிப்பு, வர்த்தகம் மற்றும் சமூக சேவை உள்ளிட்ட பல்வேறு துறைகளிலும் டோலி பார்ட்டன் தனக்கென தனித்துவமான அடையாளத்தை உருவாக்கியிருந்தார்.
குழந்தைகளுக்காக அவர் தொடங்கிய ‘Imagination Library’ திட்டத்தின் மூலம் உலகம் முழுவதும் இலவசமாகப் புத்தகங்கள் விநியோகிக்கப்பட்டதுடன், பல்வேறு சமூக நலத்திட்டங்களிலும் அவர் தொடர்ந்து பங்களித்து வந்தார்.
டோலி பார்ட்டனின் மறைவுக்கான காரணம் குறித்து அவரது பிரதிநிதிகள் தெரிவிக்கையில், குறுகிய காலமாக புற்றுநோயால் பாதிக்கப்பட்டிருந்த நிலையில் அவர் உயிரிழந்ததாகக் குறிப்பிட்டுள்ளனர்.
உலகளவில் ‘கன்ட்ரி இசையின் ராணி’ எனப் போற்றப்பட்ட டோலி பார்ட்டனின் மறைவு, இசையுலகிற்கு ஏற்பட்டுள்ள மிகப்பெரும் இழப்பாகக் கருதப்படுகிறது.









