இன்ஸ்டிடியூட் ஒஃப் டிஜிட்டல் மீடியா அண்ட் ஜர்னலிசம் (IDMJ), ஸாஹிரா கல்லூரி G80 அமைப்புடன் இணைந்து, கொழும்பு ஸாஹிரா கல்லூரி மாணவர்களுக்கான ஊடகப் பயிற்சிப் பட்டறையொன்றை அண்மையில் நடத்தியது.
கடந்த ஆகஸ்ட் 20ஆம் திகதி வியாழக்கிழமை, ஸாஹிரா கல்லூரி நீச்சல் தடாக வளாக கேட்போர் கூடத்தில் நடைபெற்ற இப்பயிற்சிப் பட்டறை, புகைப்படக்கலை மற்றும் கதைசொல்லல் ஆகியவற்றை மையமாகக் கொண்டு இடம்பெற்றது.
புகைப்படக்கலை, கதைசொல்லல் மற்றும் ஊடகத் தொடர்பாடல் தொடர்பில் மாணவர்கள் நடைமுறை அறிவையும் அனுபவங்களையும் பெற்றுக்கொள்ளும் வகையில் இப்பயிற்சிப் பட்டறை ஏற்பாடு செய்யப்பட்டது.
இந்நிகழ்வின் வளவாளர்களாக, பாகிஸ்தானின் IIUI பல்கலைக்கழகத்தில் மொழி, இலக்கியம் மற்றும் மனிதநேயம் தொடர்பான BA (Hons) பட்டம் பெற்றவரும், மனிதவள மேம்பாட்டில் MA பட்டம் பெற்றவரும், நிறுவன மனிதவள மற்றும் அபிவிருத்தி ஆலோசகருமான இர்ஃபான் நசூர்தீன், மற்றும் கொழும்பு பல்கலைக்கழக ஊடகவியல் சங்கத்தின் செயலாளரும் Amana Bank இன் அனாதைகள் பராமரிப்பு பிரிவின் பிரதிப் பணிப்பாளருமான மர்ஷாட் பாரி ஆகியோர் கலந்துகொண்டனர்.
நிகழ்வின் பிரதம அதிதியாக இலங்கைக்கான நேபாள தூதரகத்தின் பதில் பொறுப்பதிகாரி விஜய் குமார் ராவுத் கலந்துகொண்டு, மாணவர்களுடன் கலந்துரையாடினார்.
ஸாஹிரா கல்லூரி கொழும்பின் பிரதி அதிபர் திருமதி ஸீனத் இஸ்மாயில் பரிசளிப்பு நிகழ்விலும் கலந்துகொண்டார்.
IDMJ சார்பில் அதன் நிறைவேற்றுப் பணிப்பாளர் உமைர் நவ்ஷாத் மற்றும் நிர்வாகப் பணிப்பாளர் ஸமீல் ஷஃபீக் ஆகியோர் கலந்துகொண்டனர்.
G80 சார்பில் அதன் தலைவர் டி. ஹஜீரீன் ரஸீஃப், பொதுச் செயலாளர் நலீஃப் கிச்சில், பொருளாளர் நுஸ்ரத் ரமீஸ், திட்டத் தலைவர் மற்றும் உப தலைவர் அஸ்லம் கமீல் உள்ளிட்ட ஏற்பாட்டுக் குழு உறுப்பினர்கள் பங்கேற்றனர்.
ஸாஹிரா கல்லூரியின் இணைப்பாடவிதான நடவடிக்கைகளுக்குப் பொறுப்பான தலைவி திருமதி ஷினாஸ் பதுர்தீன் மற்றும் IDMJ இன் ஆலோசகர் ரஸ்மி ரஃபீக் ஆகியோரும் நிகழ்வில் கலந்துகொண்டனர்.
தேசிய இளைஞர் சேவை மன்ற இளைஞர் சம்மேளனத்தின் உறுப்பினரான ஃபவ்ஸில் அப்துல் ரஹுமான் அவர்களும் இப்பயிற்சிப் பட்டறையில் பங்கேற்றார்.
கல்வியாளர்கள், ஊடகத்துறை நிபுணர்கள், இளைஞர் பிரதிநிதிகள் மற்றும் மாணவர்களை ஒன்றிணைத்த இந்நிகழ்வு, காட்சி வழிக் கதைசொல்லல் மற்றும் நவீன தொடர்பாடலில் ஊடகங்களின் பங்கு குறித்த இளம் தலைமுறையினரின் புரிதலை மேம்படுத்துவதற்கான பயனுள்ள தளமாக அமைந்தது.
G80 இன் உப தலைவர் அஸ்லம் கமீல் நன்றியுரையை வழங்கினார்.
நிகழ்வின் பிரதம அதிதி உள்ளிட்ட முக்கியஸ்தர்களுக்கு IDMJ சார்பில் நினைவுப் பரிசுகளும் வழங்கப்பட்டன.













