முஹம்மது நபி (ஸல்) அவர்களின் பிறந்தநாளை முன்னிட்டு இலங்கையிலும் உலகெங்கிலும் வாழும் முஸ்லிம்களுக்கு பிரதமர் கலாநிதி ஹரிணி அமரசூரிய மீலாதுன் நபி தின வாழ்த்துகளைத் தெரிவித்துள்ளார்.
நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் அகில உலகிற்கும் அமைதி, சமத்துவம், கருணை மற்றும் பரஸ்பர மரியாதையின் உன்னத செய்தியைப் போதித்ததாக பிரதமர் தனது வாழ்த்துச் செய்தியில் குறிப்பிட்டுள்ளார்.
தற்போது உலகம் பல்வேறு அரசியல், பொருளாதார மற்றும் மனிதாபிமான நெருக்கடிகளை எதிர்கொள்வதுடன், கொடூரமான யுத்த மோதல்களால் நிரபராதிகளான பலர் உயிரிழந்து துன்பங்களை எதிர்கொண்டு வருவதாகவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
இத்தகைய சூழலில், நபிகளாரின் அமைதி மற்றும் மனிதநேயத்தை அடிப்படையாகக் கொண்ட தொலைநோக்குச் சிந்தனைகள் முன்னெப்போதையும் விட இன்று மிகவும் பொருத்தமானவை எனவும் ,நபிகளாரின் வாழ்க்கையிலிருந்து இன்றைய சமூகமும் இலங்கையும் கற்றுக்கொள்ள வேண்டிய முக்கியமான விடயங்களாக நீதி, மதச்சகிப்புத்தன்மை மற்றும் பொதுமக்களின் நல்வாழ்வுக்கான அர்ப்பணிப்பு ஆகியவற்றை அவர் குறிப்பிட்டுள்ளார்.
பல்வேறு இனங்களையும் மதங்களையும் சார்ந்த மக்கள் வாழும் இலங்கை போன்ற நாட்டில், ஒருவரையொருவர் புரிந்துகொண்டு உணர்வுபூர்வமாக ஒன்றிணைவதற்கு நபிகளாரின் முன்மாதிரிகளை நடைமுறை வாழ்க்கையில் கடைப்பிடிக்க வேண்டும் எனவும் பிரதமர் வலியுறுத்தியுள்ளார்.
மேலும், உலகம் போர்ச் சூழல்களிலிருந்து விடுபட்டு அமைதியான உலகமாக மாற வேண்டும் என்றும், போரினாலும் துன்புறுத்தல்களாலும் பாதிக்கப்பட்டு இடம்பெயர்ந்த மக்களுக்கு அமைதி கிடைக்க வேண்டும் என்றும் இந்த மீலாதுன் நபி தினத்தில் பிரார்த்திப்பதாக அவர் தெரிவித்துள்ளார்.
இம்முறை கம்பஹா மாவட்டத்தை மையமாகக் கொண்டு நீர்கொழும்பு பெரியமுல்லை அல் ஹிலால் தேசிய பாடசாலை வளாகத்தில் நடைபெறும் தேசிய மீலாதுன் நபி விழா, நாட்டின் பன்முகத்தன்மையைப் போற்றுவதுடன் மத நல்லிணக்கம், ஒற்றுமை மற்றும் சகோதரத்துவத்தை மேலும் வலுப்படுத்துவதற்கான சிறந்த வாய்ப்பாக அமையும் என பிரதமர் நம்பிக்கை தெரிவித்துள்ளார்.
தேசிய விழாவை வெற்றிகரமாக நடத்துவதற்கு பங்களிக்கும் முஸ்லிம் சமய பண்பாட்டலுவல்கள் திணைக்களம் உள்ளிட்ட ஏற்பாட்டுக் குழுவினருக்கும் பிரதமர் தனது நன்றியைத் தெரிவித்துள்ளார்.
இலங்கையிலும் உலகெங்கிலும் வாழும் அனைத்து முஸ்லிம்களுக்கும் அமைதி, சௌபாக்கியம், சகோதரத்துவம் மற்றும் மகிழ்ச்சி நிறைந்த இனிய மீலாதுன் நபி தின நல்வாழ்த்துகளையும் பிரதமர் கலாநிதி ஹரிணி அமரசூரிய தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.









