இஸ்லாமிய நாட்காட்டியின் ரபீஉல் அவ்வல் மாதத்தை முன்னிட்டு, உலகெங்கிலும் வாழும் முஸ்லிம்களுக்கு ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க மீலாதுன் நபி தின வாழ்த்துகளைத் தெரிவித்துள்ளார்.
மீலாதுன் நபி தினம் வெறுமனே ஒரு விழாவாகக் கருதப்படாமல், ஆன்மீகம், மனிதநேயம், சமத்துவம் மற்றும் சமூக நீதியை முன்னிறுத்தும் அர்த்தமுள்ள நாளாக அமைய வேண்டும் என ஜனாதிபதி தனது வாழ்த்துச் செய்தியில் குறிப்பிட்டுள்ளார்.
இறைத்தூதர் முஹம்மது நபி (ஸல்) அவர்கள் 23 ஆண்டுகளாக எதிர்கொண்ட சவால்கள் மற்றும் செய்த தியாகங்களின் நோக்கம் அமைதி, சகோதரத்துவம், தூய்மை, நம்பகத்தன்மை மற்றும் நீதி நிலவும் சிறந்த சமூகத்தை உருவாக்குவதாக இருந்ததாக அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
இனம், சாதி, நிறம் அல்லது குலத்தின் அடிப்படையில் மனிதர்களை மதிப்பிடுவதை நபிகளார் நிராகரித்ததுடன், உண்மைத்தன்மை, சகிப்புத்தன்மை மற்றும் கருணை போன்ற நற்பண்புகளே மனிதனின் மேன்மையை தீர்மானிக்க வேண்டும் என்பதை வலியுறுத்தியதாக ஜனாதிபதி தெரிவித்துள்ளார்.
மேலும், பணக்காரர்–ஏழை இடையிலான இடைவெளியை குறைத்து, ஒடுக்கப்பட்ட மக்களின் உரிமைகளைப் பாதுகாப்பதன் மூலம் சமூக நீதி மற்றும் சமத்துவத்திற்கான வலுவான அடித்தளத்தை நபிகளார் ஏற்படுத்தியதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
சட்டத்தின் ஆட்சி, நீதி, சமத்துவம் மற்றும் சகவாழ்வு நிலவும் சமூகத்தை கட்டியெழுப்புவதற்குத் தேவையான வழிகாட்டுதல்கள் நபிகளாரின் போதனைகளிலும் வாழ்க்கை முன்மாதிரியிலும் காணப்படுவதாகவும் ஜனாதிபதி தெரிவித்துள்ளார்.
அத்துடன், சமூக ஒழுக்கத்தை சீர்குலைக்கும் தீமைகளை இஸ்லாம் நிராகரிப்பதாகக் குறிப்பிட்ட அவர், நாட்டில் பரவி வரும் போதைப்பொருள் அச்சுறுத்தலுக்கு எதிராக அரசாங்கம் முன்னெடுத்து வரும் தேசிய செயற்பாடுகளுக்கு நபிகளாரின் போதனைகளும் வாழ்க்கை முன்மாதிரியும் வலுசேர்க்கும் எனத் தெரிவித்துள்ளார்.
வெறுப்பிற்குப் பதிலாக அன்பும், பிணக்கிற்குப் பதிலாக சகோதரத்துவமும் நிலவும் புதிய யுகத்தை நோக்கிய பயணத்தில் நபிகளாரின் மனிதநேயமும் தியாகமும் வழிகாட்டியாக அமைய வேண்டும் என ஜனாதிபதி வலியுறுத்தியுள்ளார்.
நபிகளாரின் வாழ்க்கை முன்மாதிரி, அர்ப்பணிப்பு மற்றும் போதனைகளை உண்மையாகப் பின்பற்றி, அவற்றின் அடிப்படையில் தமது வாழ்க்கையை வடிவமைத்துக்கொள்ளுமாறும் அவர் அனைவருக்கும் அழைப்பு விடுத்துள்ளார்.
இலங்கையிலும் உலகெங்கிலும் வாழும் அனைத்து முஸ்லிம்களுக்கும் அர்த்தமுள்ள மீலாதுன் நபி தின வாழ்த்துகளையும் ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க தெரிவித்துள்ளார்.









