மத்திய கிழக்கில் நிலவும் மோதல்கள் மற்றும் நிலையற்ற சூழ்நிலை தொடர்வதால், எரிபொருள் விநியோகத்திற்கான QR குறியீட்டு முறையை தொடர்ந்து நடைமுறைப்படுத்த அரசாங்கம் தீர்மானித்துள்ளதாக அமைச்சரவைப் பேச்சாளர் அமைச்சர் நளிந்த ஜயதிஸ்ஸ தெரிவித்துள்ளார்.
இன்று (25) நடைபெற்ற அமைச்சரவை முடிவுகளை அறிவிக்கும் ஊடகவியலாளர் சந்திப்பில் கேள்விக்கு பதிலளித்த அமைச்சர், எரிபொருள் விநியோகத்தை முறையாக நிர்வகிப்பதற்கு QR முறை தொடர்ந்து நடைமுறையில் இருக்க வேண்டியது அவசியம் என தெரிவித்தார்.
QR முறை அறிமுகப்படுத்தப்பட்ட பின்னர் எரிபொருள் நுகர்வு குறைந்துள்ள போதிலும், அதன் தாக்கம் மட்டுப்படுத்தப்பட்ட அளவிலேயே காணப்படுவதாகவும் அவர் குறிப்பிட்டார்.
ஹோர்முஸ் நீரிணையில் நிலவும் நிலையற்ற தன்மை உலகளாவிய எண்ணெய் விலைகளில் தொடர்ந்து தாக்கத்தை ஏற்படுத்தி வருவதாகவும், ஒரு பீப்பாய் எண்ணெயின் விலை ஏற்ற இறக்கத்துடன் காணப்படுவதாகவும் அமைச்சர் தெரிவித்தார்.
“எண்ணெய் நெருக்கடி இன்னும் தீர்க்கப்படவில்லை. ஒரு நாடாக, அன்றாட வாழ்க்கையை முடிந்தவரை இடையூறின்றி முன்னெடுத்துச் செல்வதற்காக இந்த முறையைப் பயன்படுத்துகிறோம்” என அவர் கூறினார்.









