மாகாண சபைத் தேர்தலை இயன்றளவு விரைவில் நடத்த அரசாங்கம் எதிர்பார்ப்பதாக அமைச்சரவைப் பேச்சாளரும் அமைச்சருமான நளிந்த ஜயதிஸ்ஸ தெரிவித்துள்ளார்.
இன்று நடைபெற்ற அமைச்சரவை முடிவுகளை அறிவிக்கும் ஊடகவியலாளர் சந்திப்பில், மாகாண சபைத் தேர்தல் நடத்தப்படாது என நாடாளுமன்ற உறுப்பினர் நிலந்தி கொட்டஹச்சி அண்மையில் தெரிவித்த கருத்து தொடர்பில் கேள்வி எழுப்பப்பட்டது.
இதற்கு பதிலளித்த அமைச்சர், தேர்தலை நடத்துவதற்கான நிதி ஏற்கனவே அரசாங்கத்தால் ஒதுக்கப்பட்டுள்ளதாக தெரிவித்தார்.
நாடாளுமன்றம் தேவையான சட்டங்களை இந்த வருடத்திற்குள் நிறைவேற்றி, தேர்தல் தொகுதி எல்லை நிர்ணயப் பணிகளையும் நிறைவு செய்தால், மாகாண சபைத் தேர்தலை நடத்த முடியும் என அவர் விளக்கினார்.
“மாகாண சபைத் தேர்தலை விரைவாக நடத்துவதே அரசாங்கத்தின் எதிர்பார்ப்பு. தேர்தல் நடத்தப்படாது என்ற எந்தவொரு முடிவும் இல்லை. நாடாளுமன்றத்தில் ஏற்கனவே ஒரு குழு நியமிக்கப்பட்டுள்ளது. அதன் ஊடாக இந்தப் பணிகள் முன்னெடுக்கப்பட வேண்டும்” என அமைச்சர் நளிந்த ஜயதிஸ்ஸ தெரிவித்தார்.









