இந்திய பாதுகாப்பு அமைச்சர் ராஜ்நாத் சிங்கின் இலங்கை விஜயத்துக்கான திகதிகள் உத்தியோகபூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளன.
இந்திய பாதுகாப்பு அமைச்சின் தகவல்களை மேற்கோள்காட்டி இந்திய ஊடகங்கள் வெளியிட்டுள்ள செய்திகளின்படி, எதிர்வரும் செப்டெம்பர் 9 மற்றும் 10ஆம் திகதிகளில் ராஜ்நாத் சிங்கின் இலங்கை விஜயம் இடம்பெறவுள்ளது.
இரு நாடுகளுக்கும் இடையிலான பாதுகாப்பு ஒத்துழைப்பை மேலும் வலுப்படுத்துவதே இந்த விஜயத்தின் பிரதான நோக்கம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
விஜயத்தின்போது இந்திய பாதுகாப்பு அமைச்சர் ராஜ்நாத் சிங், ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க, பிரதமர் கலாநிதி ஹரிணி அமரசூரிய மற்றும் பாதுகாப்பு அமைச்சின் செயலாளர் சம்பத் துய்யகொந்த உள்ளிட்ட முக்கியஸ்தர்களை சந்திக்கவுள்ளார்.
கடந்த ஆண்டு இந்தியப் பிரதமர் நரேந்திர மோடியின் இலங்கை விஜயத்தின்போது கையெழுத்திடப்பட்ட இந்தியா – இலங்கை பாதுகாப்பு ஒத்துழைப்பு ஒப்பந்தத்தை நடைமுறைப்படுத்துவது தொடர்பிலும் இந்த விஜயத்தின்போது மீளாய்வு செய்யப்படவுள்ளதாக இந்திய ஊடகங்கள் தெரிவிக்கின்றன.









