சிரியாவை “பயங்கரவாத ஆதரவு நாடுகள்” பட்டியலில் இருந்து அமெரிக்கா அதிகாரப்பூர்வமாக நீக்கியுள்ளது.
அமெரிக்க நிதித் துறை திங்கட்கிழமை (24) வெளியிட்ட அறிக்கையில், முன்னாள் ஜனாதிபதி பஷார் அல்-அசாத் தலைமையிலான ஆட்சிக் காலத்தில் சிரியா மீது விதிக்கப்பட்ட பல தசாப்த காலப் பட்டியலிடல் நீக்கப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அத்துடன், முன்னர் அல்-கொய்தாவின் சிரியா கிளையாகச் செயற்பட்ட அல்-நுஸ்ரா முன்னணியையும் உலகளாவிய “பயங்கரவாத” அமைப்புகள் பட்டியலில் இருந்து அமெரிக்கா நீக்கியுள்ளது. இந்த அமைப்பு தற்போது ஜனாதிபதியாக உள்ள அஹ்மத் அல்-ஷராவால் முன்னர் வழிநடத்தப்பட்டது.
இந்த நடவடிக்கை சிரியாவில் வெளிநாட்டு முதலீடுகளுக்கு காணப்பட்ட முக்கிய தடையை நீக்குவதுடன், அந்நாட்டை சர்வதேச பொருளாதார மற்றும் நிதிச் சந்தைகளுடன் மீண்டும் இணைப்பதற்கான வாய்ப்புகளையும் அதிகரிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
“இந்த நடவடிக்கை சிரியாவில் அரசியல் மற்றும் பொருளாதார ஸ்திரத்தன்மையை ஊக்குவிக்கும் மேலதிக முதலீடுகளுக்கு வழிவகுக்கும்” என அமெரிக்க கருவூலச் செயலாளர் ஸ்காட் பெசென்ட் தெரிவித்துள்ளார்.
2025 ஜூன் மாதத்தில் சிரியா மீதான பொருளாதாரத் தடைகளை அமெரிக்கா தளர்த்தியிருந்த நிலையில், தற்போது அந்நாடு “பயங்கரவாத ஆதரவு நாடு” என்ற பட்டியலில் இருந்தும் நீக்கப்பட்டுள்ளது.
சிரிய மத்திய வங்கியின் ஆளுநர் சஃப்வத் ரஸ்லான், இந்த நடவடிக்கையை “வரலாற்றுச் சிறப்புமிக்க முன்னேற்றம்” என வரவேற்றுள்ளார்.
மேலும், இந்த முடிவு சிரியாவை உலகளாவிய பொருளாதார மற்றும் நிதி அமைப்புடன் மீண்டும் ஒருங்கிணைப்பதற்கும், முதலீடுகள் மற்றும் நவீன தொழில்நுட்பங்களை ஈர்ப்பதற்கும் முக்கிய வாய்ப்பை ஏற்படுத்தும் என சிரிய நிதியமைச்சர் மொஹமட் பர்னியே தெரிவித்துள்ளார்.
அமெரிக்காவின் சிரியாவுக்கான சிறப்புத் தூதுவர் டொம் பராக், இந்த முடிவை சிரியா தனிமைப்படுத்தப்பட்ட நிலையிலிருந்து சர்வதேச கூட்டாண்மையை நோக்கி நகர்வதற்கான “தீர்மானகரமான நடவடிக்கை” எனக் குறிப்பிட்டுள்ளார்.
செய்தி மூலம்: அல்ஜசீரா









