பசிபிக் பெருங்கடலில் உருவாகி வரும் எல் நினோ (El Niño) நிகழ்வு, கடந்த பல தசாப்தங்களில் பதிவானவற்றில் மிகவும் வலுவானதாக இருக்கக்கூடும் என பிரிட்டன் வானிலை ஆய்வு மையம் (Met Office) எச்சரித்துள்ளது.
இயற்கையாக ஏற்படும் இந்த காலநிலை நிகழ்வு உலக வெப்பநிலையை அதிகரிப்பதுடன், பல்வேறு நாடுகளில் தீவிர வானிலை நிகழ்வுகளுக்கான ஆபத்தையும் அதிகரிக்கக்கூடும்.
மனிதனால் ஏற்படும் காலநிலை மாற்றத்தின் தாக்கத்துடன் எல் நினோ இணைவதால், 2027ஆம் ஆண்டு இதுவரை பதிவானவற்றில் அதிக வெப்பமான ஆண்டாக மாறுவதற்கான வாய்ப்பு மிக அதிகம் என Met Office தெரிவித்துள்ளது.
தற்போதைய கணிப்புகளின்படி, பசிபிக் கடலின் குறிப்பிட்ட பகுதிகளில் கடல் மேற்பரப்பு வெப்பநிலை இயல்பை விட 2°C-க்கும் அதிகமாக உயர்ந்துள்ளது. இந்த ஆண்டு இறுதிக்குள் இந்த வெப்பநிலை வேறுபாடு 3°C-ஐத் தாண்டக்கூடும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இது 1950ஆம் ஆண்டு தொடங்கிய பதிவுகளில் முன்னெப்போதும் இல்லாத அளவாக இருக்கும் என விஞ்ஞானிகள் கூறுகின்றனர். சில காலநிலை ஆய்வு நிறுவனங்கள் இந்த அதிகரிப்பு 4°C வரை செல்லக்கூடும் என கணித்துள்ளன.
எல் நினோ காரணமாக உலகின் பல பகுதிகளில் மழைப்பொழிவு மற்றும் புயல் நடவடிக்கைகளிலும் மாற்றங்கள் ஏற்படக்கூடும். தெற்காசியாவில் தென்மேற்கு பருவமழை இயல்பை விட குறைவாக இருப்பதும், அட்லாண்டிக் பகுதியில் சூறாவளி நடவடிக்கைகள் குறைந்திருப்பதும் இதன் சாத்தியமான தாக்கங்களாகக் குறிப்பிடப்படுகின்றன.
பிரிட்டனிலும் இந்த ஆண்டு இலையுதிர் காலத்தில் அதிக மழை மற்றும் புயல் நிலைமைகளுக்கான ஆபத்து அதிகரிக்கக்கூடும் என எச்சரிக்கப்பட்டுள்ளது.
மேலும், எல் நினோ காரணமாக உணவுப் பாதுகாப்பு பாதிக்கப்படக்கூடும் என்றும், ஆபத்துக்குள்ளாகும் நாடுகளில் கோடிக்கணக்கான மக்கள் கடுமையான உணவுப் பற்றாக்குறையை எதிர்கொள்ள நேரிடலாம் என்றும் ஐ.நா. உணவு மற்றும் வேளாண்மை அமைப்பு எச்சரித்துள்ளது.
ஆதாரம்; பிபிசி









