இஸ்மதுல் றஹுமான்
சவூதி அரேபியாவில் நடைபெற்ற 46ஆவது மன்னர் அப்துல் அஸீஸ் புனித அல் குர்ஆன் மனனப் போட்டியில், 5ஆம் பிரிவில் போட்டியிட்ட இலங்கை மாணவன் அல் ஹாபிழ் எம்.ஐ. முஹம்மத் இம்தாத் மூன்றாம் இடத்தைப் பெற்று இலங்கைக்கு பெருமை சேர்த்துள்ளார்.
கண்டி, கல்கின்னையைச் சேர்ந்த முஹம்மத் இம்தாத், ராஜகிரிய மவாஹிபுல் உலும் மத்ரஸாவின் மாணவராவார். ஆகஸ்ட் 19ஆம் திகதி புனித மக்கா மஸ்ஜிதுல் ஹரமில் நடைபெற்ற பரிசளிப்பு விழாவில் அவருக்கு 55,000 சவூதி ரியால், அதாவது சுமார் 49 இலட்சம் இலங்கை ரூபாய் பணப்பரிசாக வழங்கப்பட்டது.
இம்தாத்தின் இந்த வெற்றி இலங்கை முஸ்லிம்களுக்கு மட்டுமன்றி, நாட்டின் புனித அல் குர்ஆன் மனனத் துறைக்கும் கிடைத்துள்ள முக்கியமான கௌரவமாகக் கருதப்படுகிறது.
சவூதி அரேபியத் தூதரகத்தின் மேற்பார்வையில், இலங்கை முஸ்லிம் சமய பண்பாட்டலுவல்கள் திணைக்களமும் சவூதி இஸ்லாமிய விவகார அமைச்சும் இணைந்து கடந்த ஜனவரி மாதம் இலங்கையில் நடத்திய 3ஆவது தேசிய அல் குர்ஆன் மனனப் போட்டியில், இம்தாத் தனது பிரிவில் முதலிடத்தைப் பெற்றிருந்தார். இதன் மூலம் சர்வதேச போட்டியில் பங்கேற்கும் வாய்ப்பையும் அவர் பெற்றார்.
இம்முறை நடைபெற்ற சர்வதேசப் போட்டியில் 133 நாடுகளைச் சேர்ந்த 334 ஆண் மற்றும் பெண் போட்டியாளர்கள் பங்கேற்றனர். மேலும், இவ்வாண்டு முதன்முறையாக பெண்களுக்கும் போட்டியில் பங்கேற்க வாய்ப்பு வழங்கப்பட்டது.
இதற்கமைய, இலங்கையிலிருந்து இரு மாணவிகள் உட்பட நான்கு போட்டியாளர்கள் சர்வதேச குர்ஆன் மனனப் போட்டியில் பங்கேற்றனர். இலங்கை சார்பில் போட்டியில் பங்கேற்ற நான்கு பேரும் ஆரம்ப சுற்றில் தெரிவாகி இறுதிப் போட்டிக்குத் தகுதி பெற்றமை இம்முறை போட்டியின் மற்றுமொரு சிறப்பம்சமாகும்.
கண்டி, கல்கின்னையைச் சேர்ந்த ராஜகிரிய மவாஹிபுல் உலும் மத்ரஸா மாணவன் முஹம்மத் இம்தாத் இயாஸ் முஹம்மத், புத்தளத்தைச் சேர்ந்த அடுலுகம தாரு ஆயிஷா மத்ரஸா மாணவி எம்.ஏ. பாத்திமா நிலாமா, தெஹிவளையைச் சேர்ந்த தாருல் உலூம் மத்ரஸா மாணவன் முஹம்மத் இப்பத் சயீத் மற்றும் கண்டி, எலமல்தெனியையைச் சேர்ந்த உம்முல் குரா மகளிர் அரபுக் கல்லூரி மாணவி மும்தாசா மன்சூர் ஆகியோர் இலங்கை சார்பில் போட்டியில் பங்கேற்றனர்.
போட்டியாளர்களை வழியனுப்பும் நிகழ்வு, இலங்கைக்கான சவூதி அரேபியாவின் பதில் தூதுவர் யசீர் அப்துல்ரஹ்மான் அல்ஹாஸ்மி தலைமையில் கொழும்பிலுள்ள சவூதி அரேபிய தூதரகத்தில் நடைபெற்றது.
இதில் சமய விவகார மற்றும் கலாசார அலுவல்கள் பிரதி அமைச்சர் முனீர் முளப்பர், முஸ்லிம் சமய பண்பாட்டலுவல்கள் திணைக்களப் பணிப்பாளர் எம்.எஸ்.எம். நவாஸ், போட்டியாளர்களின் பெற்றோர் மற்றும் தூதரக அதிகாரிகள் கலந்துகொண்டனர்.
இதன்போது போட்டியாளர்களுக்கும் அவர்களுடன் பயணித்த பெற்றோர்களுக்கும் தேவையான பயணச்சீட்டு மற்றும் விசா ஆவணங்கள் கையளிக்கப்பட்டன.
மேலும், போட்டியில் பங்கேற்கச் சென்ற மாணவர்களுக்கும் அவர்களது பெற்றோர்களுக்கும் புனித உம்ரா கடமையை நிறைவேற்றுவதற்கும், மக்கா மற்றும் மதீனா நகரங்களிலுள்ள முக்கிய இடங்களைப் பார்வையிடுவதற்கும் தேவையான வசதிகளும் ஏற்படுத்திக் கொடுக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது









