பாகிஸ்தானின் முன்னாள் பிரதமர் இம்ரான் கான், இஸ்லாமாபாத்தில் உள்ள ஷிஃபா சர்வதேச மருத்துவமனையில் மருத்துவப் பரிசோதனை மேற்கொண்ட பின்னர் மீண்டும் அடியாலா சிறைக்கு மாற்றப்பட்டுள்ளார்.
இம்ரான் கான் மருத்துவ ரீதியாக சிறையில் தங்குவதற்கு தகுதியானவர் என மருத்துவர்கள் தெரிவித்ததைத் தொடர்ந்து அவர் மீண்டும் சிறைக்கு அழைத்துச் செல்லப்பட்டதாக அவரது பாகிஸ்தான் தெஹ்ரீக்-இ-இன்சாஃப் (PTI) கட்சி தெரிவித்துள்ளது.
கண் மருத்துவர், இருதய நிபுணர் மற்றும் பொது மருத்துவர் உள்ளிட்ட மருத்துவக் குழுவினர் அவரை விரிவாகப் பரிசோதித்ததாக பாகிஸ்தான் தகவல் அமைச்சர் அட்டாவுல்லா தரார் தெரிவித்துள்ளார்.
73 வயதான இம்ரான் கான், உடல்நலக் கவலைகள் காரணமாக சிறப்பு மருத்துவ சிகிச்சை வழங்குமாறு பாகிஸ்தான் உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டதைத் தொடர்ந்து, நேற்று நள்ளிரவில் மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லப்பட்டார்.
சிறையில் இருந்தபோது அவரது உடல்நிலை மோசமடைந்ததாகவும், வலது கண்ணின் பார்வையில் குறிப்பிடத்தக்க அளவு பாதிப்பு ஏற்பட்டுள்ளதாகவும் அவரது வழக்கறிஞர்கள் தெரிவித்துள்ளனர்.
2023 ஆகஸ்ட் முதல் சிறையில் உள்ள இம்ரான் கான், தமக்கு எதிரான வழக்குகள் அரசியல் நோக்கம் கொண்டவை எனக் கூறி வருகிறார். ஆனால், இந்தக் குற்றச்சாட்டை பாகிஸ்தான் அரசு மறுத்துள்ளது.
இம்ரான் கானை மருத்துவமனைக்கு மாற்றுவதற்கு எதிர்ப்பு தெரிவித்த பாகிஸ்தான் சட்ட அமைச்சர், சட்டப்படி தண்டனை பெற்ற கைதிக்கு சிறையிலோ அல்லது அரசு மருத்துவமனையிலோ சிகிச்சை வழங்கப்பட வேண்டும் என தெரிவித்துள்ளார்.
இம்ரான் கான் மருத்துவமனையில் இருந்த குறுகிய நேரத்தில், அவரது ஆதரவாளர்கள் பலர் மருத்துவமனைக்கு அருகே திரண்டிருந்ததாக AFP செய்தி நிறுவனம் தெரிவித்துள்ளது.








