புத்தளம் மாவட்டத்தில் உள்ள அனவிலுந்தாவ ராம்சார் சரணாலயத்தில் ஏற்பட்டுள்ள காட்டுத்தீயை கட்டுப்படுத்தும் பணிகள் அதிகாரிகள் மற்றும் பொதுமக்களின் பங்களிப்புடன் தொடர்ந்து முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.
வனஜீவராசிகள் பாதுகாப்புத் திணைக்களத்தின் தகவலின்படி, புதன்கிழமை (19) சரணாலயத்தின் மையியாவ குளம் பிட்டிய பகுதியில் தீ பரவத் தொடங்கியுள்ளது.
வனஜீவராசிகள் அதிகாரிகளுடன் சிலாபம் பிரதேச செயலகம், சிலாபம் பிரதேச சபை, ஆராச்சிக்கட்டுவ பிரதேச செயலகம், ஆராச்சிக்கட்டுவ பிரதேச சபை மற்றும் சிலாபம் தீயணைப்பு பிரிவினர் இணைந்து தீயை கட்டுப்படுத்தும் நடவடிக்கையில் ஈடுபட்டுள்ளனர்.
தீயணைப்பு பணிகளுக்காக நீர் பவுசர்கள் மற்றும் டிராக்டர்கள் பயன்படுத்தப்பட்டு வருவதுடன், மையியாவ மற்றும் போகஹவெட்டிய பகுதிகளைச் சேர்ந்த பொதுமக்களும் அதிகாரிகளுடன் இணைந்து தீயை கட்டுப்படுத்தும் பணியில் ஈடுபட்டுள்ளனர்.
இதுவரை சுமார் 7 ஏக்கர் பரப்பளவில் தீ பரவியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
தீயை கட்டுப்படுத்தும் நடவடிக்கையாக தீ தடுப்பு பாதைகள் அமைக்கப்பட்டதுடன், பேக்கோ இயந்திரங்களைக் கொண்டு நிலப்பரப்பும் தயார்படுத்தப்பட்டது. எனினும், பலத்த காற்று மற்றும் அதிகரித்து வரும் வெப்பநிலை காரணமாக தீயை கட்டுப்படுத்துவதில் சிரமம் ஏற்பட்டுள்ளது.









