காசா பகுதியில் நிலவும் கடுமையான குடிநீர் மற்றும் உணவுத் தட்டுப்பாடு காரணமாக, சிறு வயதிலேயே குழந்தைகள் தங்களது வயதுக்கு மீறிய பொறுப்புகளை சுமக்க வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது.
மத்திய காசாவின் மகாஸி அகதி முகாமில் வசிக்கும் 10 வயதான மைசரா சகூத், தினமும் விடியற்காலையிலேயே எழுந்து தனது குடும்பத்திற்காக குடிநீர் தேடும் பணியைத் தொடங்குகிறார்.
அன்று காலையிலும் தனது தண்ணீர் கொள்கலன்களைத் தயாரித்துக் கொண்டு, தனது 5 வயது சகோதரர் ஜவாத்துடன் கூடாரத்தின் முன்பாக தண்ணீர் லொறிக்காக காத்திருந்தார். பல மணி நேரங்கள் கடந்தும் தண்ணீர் லொறி வரவில்லை.
இதற்கிடையில் மைசரா முகாமில் அமைக்கப்பட்டிருந்த கல்விக் கூடாரத்தில் ஆங்கில வகுப்புக்குச் சென்றார். ஆனால் சிறிது நேரத்திலேயே தண்ணீர் லொறி வந்துவிட்டதாகக் குரல் எழுந்தது.வகுப்பை உடனடியாக விட்டுவிட்டு, மைசராவும் ஏனைய குழந்தைகளும் தங்களது தண்ணீர் கொள்கலன்களை எடுத்துக்கொண்டு ஓடினர்.
“எங்கள் கூடாரத்தில் குடிப்பதற்கும், பாத்திரங்களைக் கழுவுவதற்கும், கழிப்பறையைப் பயன்படுத்துவதற்கும் கூட தண்ணீர் இல்லை. தண்ணீர் தீர்ந்து போகும் முன் விரைவாகச் சென்று கொள்கலன்களை நிரப்ப வேண்டியிருந்தது” என மைசரா தெரிவித்தார்.
சிறிய உடலால் இரண்டு கனமான தண்ணீர் கொள்கலன்களை சுமந்து சென்ற மைசரா, வலி மற்றும் சோர்வு கலந்த புன்னகையுடன் தனது குடும்பத்தினரிடம் சுமார் 20 லிட்டர் தண்ணீரை கொண்டு சென்றார். அந்தத் தண்ணீர் 6 பேர் கொண்ட அவரது குடும்பத்திற்குப் பயன்படுத்தப்பட வேண்டியது.
வயதுக்கு மீறிய சுமைகள்!
காசா குழந்தைகளின் போராட்டம் தண்ணீரைத் தேடுவதுடன் முடிவடைவதில்லை. 12 வயதான யமென் சாலே மற்றும் அவரது 6 வயது சகோதரர் அமான் ஆகியோரும் தங்களது நாளின் பெரும்பகுதியை தண்ணீர் லொறிகளுக்காகவும் ,சமையலறைகளிலும் காத்திருப்பதில் செலவிடுகின்றனர்.
“ஒவ்வொரு முறையும் தண்ணீரை கூடாரத்திற்கு எடுத்துச் செல்லும்போது மிகவும் சோர்வாகவும், குறிப்பாக தோள்களிலும் முதுகிலும் வலியாகவும் இருக்கும். சில நேரங்களில் கொள்கலன்கள் மிகவும் கனமாக இருப்பதால் தடுமாறி கீழே விழுகிறேன்” என யமென் கூறினார்.
அவர்களின் தாய் பிதா சாலே, தனது குழந்தைகள் எதிர்கொள்ளும் நிலையைப் பார்த்து வேதனைப்படுகிறார்.
“இடம்பெயர்ந்து வாழும் வாழ்க்கையின் சுமையால் என் குழந்தைகள் கூடாரத்திற்குள் சோர்ந்து கிடப்பதைப் பார்ப்பது என் இதயத்தை உடைக்கிறது. தண்ணீர் மற்றும் உணவுக்காக தினமும் மேற்கொள்ளும் பயணங்கள் அவர்களின் முழு சக்தியையும் எடுத்துக்கொள்கின்றன. அந்த சக்தி மற்ற குழந்தைகளைப் போல கல்வி கற்பதற்கும் விளையாடுவதற்கும் பயன்படுத்தப்பட வேண்டியது” என அவர் தெரிவித்தார்.
இந்த அன்றாட சுமைகள் குழந்தைகளுக்கு உடல் ரீதியாக மட்டுமல்லாமல், மன ரீதியாகவும் பாதிப்பை ஏற்படுத்துகின்றன.
மத்திய காசாவில் பணியாற்றும் மருத்துவர் வைத்தியர் சுமயா சலாஹ் கூறுகையில், குழந்தைகள் மேற்கொள்ளும் கடுமையான பணிகளால் தசை வலி, தசை இறுக்கம் மற்றும் பிடிப்பு போன்ற பிரச்சினைகளுடன், குடலிறக்கம் மற்றும் முதுகெலும்பு வளைவு (Scoliosis) போன்ற தீவிர உடல்நலப் பிரச்சினைகளும் ஏற்படுகின்றன.
அவர் 9 வயதான ராகத் என்ற சிறுமியின் நிலையை எடுத்துக்காட்டினார். வடக்கு காசாவில் பலமுறை ஏற்பட்ட உணவுப் பஞ்சங்களை எதிர்கொண்ட ராகத், தினமும் நீண்ட தூரம் சென்று தண்ணீர் சுமந்து வந்துள்ளார். தற்போது அவருக்கு முதுகெலும்பு வளைவு ஏற்பட்டுள்ளது. உரிய சிகிச்சை கிடைக்காவிட்டால், எதிர்காலத்தில் கடுமையான மற்றும் நிரந்தர பாதிப்புகள் ஏற்படக்கூடும் என மருத்துவர் எச்சரித்துள்ளார்.
காசாவில் கடுமையான தண்ணீர் நெருக்கடி!
போருக்கு முன்னர் குழந்தைகளிடையே பொதுவாகக் காணப்படாத இத்தகைய உடல்நலப் பிரச்சினைகள் தற்போது தினமும் பல குழந்தைகளிடம் காணப்படுவதாக மருத்துவர்கள் தெரிவிக்கின்றனர்.
UNICEF தரவுகளின்படி, காசாவில் 82 சதவீத குடும்பங்கள் தண்ணீர் பாதுகாப்பற்ற நிலையில் உள்ளன. மேலும், 70 சதவீதம் வரையிலான குடும்பங்களால் ஒரு நபருக்கு நாளொன்றுக்கு குறைந்தது 6 லிட்டர் தண்ணீரைக்கூடப் பெற முடியாத நிலை காணப்படுகிறது.
காசாவின் நீர் மற்றும் கழிவுநீர் உட்கட்டமைப்புகளில் சுமார் 90 சதவீதம் அழிக்கப்பட்டுள்ளதாக UNICEF தெரிவித்துள்ளது.
மகாஸி முகாமின் மேயர் மொஹம்மத் மொஸ்லெஹ் கூறுகையில், இஸ்ரேலின் முற்றுகை காரணமாக நீர் பம்புகள் மற்றும் ஜெனரேட்டர்களுக்குத் தேவையான உதிரிப்பாகங்கள் மற்றும் எரிபொருள் பற்றாக்குறை ஏற்பட்டுள்ளது.
மேலும், மகாஸி முகாமில் உள்ளூர் நகராட்சியால் இயக்கப்படும் ஒரே ஒரு தண்ணீர் லொறி மூலம் 5,000-க்கும் மேற்பட்ட குடும்பங்களுக்கு தண்ணீர் வழங்க வேண்டிய நிலை உள்ளதாக அவர் தெரிவித்தார்.
உணவுக்காகவும் நீண்ட வரிசை!
தண்ணீரைப் போலவே உணவையும் பெறுவது காசா குடும்பங்களுக்கு பெரும் போராட்டமாக மாறியுள்ளது.
மைசராவின் தாய் ஹுதா சகூத், தனது மகள் உணவு கிடைக்காமல் வெறுங்கையுடன் வீடு திரும்பும்போது அடிக்கடி அழுவதாகக் கூறினார்.
“என் மகள் அழுதுகொண்டே வெற்றுக் கிண்ணத்துடன் கூடாரத்திற்குள் வந்தபோது நான் அதிர்ச்சியடைந்தேன். தனது முயற்சி வீணானதற்காக மட்டும் அவள் வருந்தவில்லை. குடும்பத்திற்காக உணவை கொண்டு வர முடியவில்லை என்பதாலும் அவள் மனமுடைந்திருந்தாள்” என ஹுதா கூறினார்.
“நான் மிகவும் சோகமாகவும் கோபமாகவும் இருந்தேன். சமூக சமையலறையில் உணவுக்காக வெயிலில் ஒரு மணி நேரம் வரிசையில் காத்திருந்தேன். ஆனால் எனது முறை வருவதற்கு முன்பே உணவு தீர்ந்துவிட்டது. இது நியாயமில்லை” என மைசரா தெரிவித்தார்.
குழந்தைகளின் மனநிலையிலும் தாக்கம்!
குழந்தைகளின் அன்றாட போராட்டங்கள் அவர்களின் மனநிலையையும் ஆழமாக பாதித்துள்ளதாக பிதா சாலே கூறுகிறார்.
“அது அவர்களின் ஆளுமையிலேயே பதிந்துவிட்டது. பெரும்பாலான நேரங்களில் அவர்கள் பெரியவர்களைப் போல தங்களது அன்றாட பொறுப்புகளைப் பற்றியே சிந்தித்து பேசுகின்றனர். அவர்கள் மிகவும் மாறிவிட்டனர். பிடிவாதமாகவும், குறைவாகப் பேசுபவர்களாகவும், தங்களது உணர்வுகளை வெளிப்படுத்த முடியாதவர்களாகவும் மாறிவிட்டனர்” என அவர் கூறினார்.
போருக்கு முந்தைய வாழ்க்கையைப் பற்றிய நினைவுகளே தற்போது குழந்தைகளுக்கு சிறிய மகிழ்ச்சியைத் தருவதாகவும் அவர் தெரிவித்தார்.
அவர்கள் தங்களது பள்ளி, வீட்டில் சமைக்கப்பட்ட உணவு, வாராந்திர குடும்பப் பயணங்கள் போன்றவற்றை நினைவுகூரும்போது முகத்தில் மீண்டும் புன்னகை தோன்றுவதாக அவர் கூறினார்.
கல்வியே நம்பிக்கையின் ஒளி!
இத்தனை துயரங்களுக்கு மத்தியிலும் காசா குழந்தைகளும் அவர்களின் குடும்பங்களும் சிறந்த எதிர்காலத்திற்கான நம்பிக்கையை கைவிடவில்லை.
பிதா சாலே கூறுகையில், போரின் தொடக்கத்தில் வடக்கு காசாவில் இருந்து வெளியேறும்போது பெரும்பாலான பொருட்களை எடுத்துச் செல்ல முடியவில்லை. ஆனால் தனது குழந்தைகளின் பள்ளிச் சான்றிதழ்களை மட்டும் எடுத்துச் சென்றதாக தெரிவித்தார்.
மகாஸி முகாம் குழு, முகாமில் உள்ள ஆசிரியர்களின் தன்னார்வ உதவியுடன் குழந்தைகளுக்காக கல்விக் கூடாரங்களை அமைத்துள்ளது. அங்கு அடிப்படை பாடங்கள் கற்பிக்கப்படுவதுடன், கலாசார மற்றும் பொழுதுபோக்கு நடவடிக்கைகளும் ஏற்பாடு செய்யப்படுகின்றன.
முகாம் குழுவின் தலைவர் மொஹம்மத் சகூத், பாலஸ்தீனக் கவிஞர் மஹ்மூத் தர்வீஷின் வரிகளை மேற்கோள் காட்டி கூறினார்:
“வாழ்வதற்கான ஒரு வழியைக் கண்டுபிடிக்க முடிந்தால், நாம் வாழ்க்கையை நேசிக்கிறோம்.”
“எங்கள் குழந்தைகள் பாதுகாப்புடனும் கண்ணியத்துடனும் வாழ வேண்டும். உலகின் மற்ற குழந்தைகளைப் போல அவர்கள் விளையாடவும், கல்வி கற்கவும், வளரவும் வேண்டும் என்பதே எங்கள் கனவு” என அவர் தெரிவித்தார்.
10 வயதான மைசராவின் கனவு மிகவும் எளிமையானது.
“எனக்கென்று ஒரு அறையும் நிறைய பொம்மைகளும் வேண்டும். அழகான சீருடை அணிந்து, தலைமுடியைச் சீவி ஒரு உண்மையான பள்ளிக்குச் செல்ல வேண்டும். எங்கள் வீட்டிற்கு குழாய்கள் வழியாக தண்ணீர் வர வேண்டும். தண்ணீரைச் சுமந்து செல்ல வேண்டிய அவசியமில்லாமல், எப்போதும் திறந்த குழாயில் தண்ணீர் வர வேண்டும் என்பதே என் ஆசை.”
அப்ரா அன்சார்











