16 வயதைக் கடந்த பின்னரும் கல்வியைத் தொடரும் ஆண் மாணவர்களின் எண்ணிக்கை குறைந்து வரும் போக்கு குறித்து பிரதமர் கலாநிதி ஹரிணி அமரசூரிய கவலை தெரிவித்துள்ளார்.
பெண்கள், இளைஞர்கள் மற்றும் சிறுவர்களின் வேலைவாய்ப்பு தொடர்பான சட்டமூலத்தின் இரண்டாம் வாசிப்பு விவாதத்தில் இன்று (20) உரையாற்றிய பிரதமர், 16 வயது வரை கட்டாயக் கல்வி சட்டரீதியாக உறுதி செய்யப்பட்டுள்ள போதிலும், மாணவர்களை தொடர்ந்து பாடசாலை கல்வியில் தக்கவைப்பது தற்போது அதிகரித்து வரும் சவாலாக உள்ளதாகக் குறிப்பிட்டார்.
13 வருட கல்வியை முழுமையாக நிறைவு செய்யாமல் பாடசாலையை விட்டு வெளியேறும் சிறுவர்கள் போதிய திறன்கள் மற்றும் தகைமைகள் இன்றி தொழில்சந்தைக்குள் நுழைய நேரிடுவதுடன், சுரண்டல் உள்ளிட்ட பல்வேறு ஆபத்துகளுக்கு அவர்கள் உள்ளாகும் வாய்ப்பும் அதிகரிப்பதாக பிரதமர் சுட்டிக்காட்டினார்.
2026ஆம் ஆண்டு முதல் அறிமுகப்படுத்தப்பட்டுள்ள கல்வி மறுசீரமைப்புகளின் முக்கிய நோக்கங்களில் ஒன்று, மாணவர்கள் தொடர்ந்து பாடசாலையில் கல்வி கற்க ஊக்கமளிக்கும் பாதுகாப்பான மற்றும் ஆதரவான கற்றல் சூழலை உருவாக்குவதாகும் என அவர் தெரிவித்தார்.
மேலும், சிறுவர் பாதுகாப்பை மேம்படுத்துவதற்காக 2026ஆம் ஆண்டில் ஆரம்பப் பாடசாலைகளின் உட்கட்டமைப்பு வசதிகளை மேம்படுத்த 1.9 பில்லியன் ரூபாய் ஒதுக்கப்பட்டுள்ளதாகவும், பாடசாலைகளில் ஆலோசனை மற்றும் உளவியல்-சமூக ஆதரவை வழங்கும் C2 மையங்கள் அறிமுகப்படுத்தப்பட்டு வருவதாகவும் பிரதமர் தெரிவித்தார்.
ஆரம்பக் குழந்தைப் பருவக் கல்வி, போஷாக்கு மற்றும் பாடசாலை போக்குவரத்து உள்ளிட்ட துறைகளிலும் சிறுவர் பாதுகாப்பு நடவடிக்கைகள் வலுப்படுத்தப்பட்டு வருவதாக அவர் கூறினார்.
தற்போதைய பாடசாலை விடுமுறைக் காலத்தில் சிறுவர்கள் மீது அதிகளவான கல்விசார் அழுத்தங்களை பெற்றோர்களும் ஆசிரியர்களும் ஏற்படுத்துவதை தவிர்க்க வேண்டும் எனவும் பிரதமர் கேட்டுக்கொண்டார். சிறுவர்களுக்கு போதிய ஓய்வும் புத்துணர்வும் பெறுவதற்கான நேரம் அவசியம் என அவர் வலியுறுத்தினார்.









