இந்திய பாதுகாப்பு அமைச்சர் ராஜ்நாத் சிங் இலங்கைக்கு உத்தியோகபூர்வ விஜயமொன்றை மேற்கொள்ளவுள்ளதாக இந்திய ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
குறித்த விஜயம் எதிர்வரும் செப்டம்பர் மாதத்தின் முதல் வாரத்தில் இடம்பெறவுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
இந்திய பாதுகாப்பு அமைச்சரின் இலங்கை விஜயம் தொடர்பாக கொழும்பிலுள்ள இந்திய உயர்ஸ்தானிகராலயத்திற்கும் இலங்கை பாதுகாப்பு அமைச்சுக்கும் இடையில் அண்மையில் கலந்துரையாடலொன்றும் இடம்பெற்றுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
இந்த விஜயத்தின் போது இந்திய பாதுகாப்பு அமைச்சர் ராஜ்நாத் சிங், ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க உள்ளிட்ட அரசாங்கத்தின் உயர்மட்டப் பிரதிநிதிகளை சந்தித்து இருதரப்பு பேச்சுவார்த்தைகளை நடத்தவுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
இதன்போது, இரு நாடுகளுக்கும் இடையிலான பாதுகாப்பு ஒத்துழைப்பு, கூட்டு நடவடிக்கைகள், பயிற்சித் திட்டங்கள் மற்றும் பிராந்திய பாதுகாப்பு விவகாரங்கள் உள்ளிட்ட முக்கிய விடயங்கள் தொடர்பில் கவனம் செலுத்தப்படவுள்ளதாக கூறப்படுகிறது.
இலங்கை மற்றும் இந்தியாவுக்கு இடையிலான பாதுகாப்பு உறவுகளை மேலும் வலுப்படுத்துவது தொடர்பிலும் இந்த விஜயத்தின் போது முக்கியத்துவம் அளிக்கப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.
இதேவேளை, 2023ஆம் ஆண்டு செப்டம்பர் மாதத்திலும் இந்திய பாதுகாப்பு அமைச்சர் ராஜ்நாத் சிங் இலங்கைக்கு விஜயம் செய்ய திட்டமிடப்பட்டிருந்தது. எனினும், பின்னர் குறித்த விஜயம் இரத்து செய்யப்பட்டமை குறிப்பிடத்தக்கது.









