உலக சுற்றுலா தினத்தை முன்னிட்டு, மன்னார் மாவட்டம் தலைமன்னாரிலிருந்து ராமர் பாலத்துடன் தொடர்புடைய மணல் திட்டுகளை பார்வையிடுவதற்கான விசேட படகு சேவைகள் எதிர்வரும் 15ஆம் திகதி முதல் ஆரம்பிக்கப்படவுள்ளன.
இதற்கான சோதனை ஓட்ட நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளதுடன், சேவையை ஆரம்பிப்பதற்கான பூர்வாங்க ஏற்பாடுகள் நிறைவடைந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இது தொடர்பான விசேட கலந்துரையாடல் மன்னார் மாவட்டச் செயலகத்தில் அரசாங்க அதிபர் க. கனகேஸ்வரன் தலைமையில் நேற்று (01) நடைபெற்றது. இதில் திணைக்களத் தலைவர்கள், தலைமன்னார் பங்குத்தந்தை மற்றும் கிராம மக்கள் உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர்.
ஒரு படகில் அதிகபட்சமாக 7 சுற்றுலாப் பயணிகள் பயணிக்க அனுமதிக்கப்படவுள்ளனர். வனஜீவராசிகள் திணைக்களத்தினால் ஒருவருக்கு ரூ.140 கட்டணம் அறவிடப்படவுள்ளதுடன், படகு உரிமையாளர்களால் ஒருவருக்கு ரூ.2,500 கட்டணம் அறவிடப்படவுள்ளது. இதன்படி, 7 பயணிகளைக் கொண்ட ஒரு படகுக்கான கட்டணம் ரூ.17,500 ஆக நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
இந்தக் கட்டணத்தின் மூலம் இலங்கைக்குச் சொந்தமான 5 மணல் தீவுகள் வரை சென்று பார்வையிட முடியும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
முதலாவது மணல் தீவில் நீச்சல் உள்ளிட்ட பொழுதுபோக்கு நடவடிக்கைகளில் ஈடுபடுவதற்கான வசதிகள் செய்யப்பட்டுள்ளதுடன், இதற்கான மேலதிக கட்டணங்கள் பின்னர் அறிவிக்கப்படவுள்ளன.
மேலும், மூன்றாவது மணல் தீவில் இறங்கி குறிப்பிட்ட நேரம் தங்கியிருந்து பார்வையிடுவதற்கும் ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.
எதிர்வரும் 15ஆம் திகதி முதல் ஆரம்பிக்கப்படவுள்ள இப் படகு சேவையைப் பயன்படுத்த விரும்பும் சுற்றுலாப் பயணிகள், சுற்றுலா மேலாண்மைக் குழுவைத் தொடர்புகொண்டு தங்களுக்கான பயண ஏற்பாடுகளை மேற்கொள்ளலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது.








