சாம்பியாவின் அதிபர் ஹகைண்டே ஹிச்சிலேமா இரண்டாவது முறையாக ஜனாதிபதியாகத் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளதாக அந்நாட்டு தேர்தல் ஆணைக்குழு அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது.
செவ்வாய்க்கிழமை (18) அதிகாலை வெளியிடப்பட்ட தேர்தல் முடிவுகளின்படி, ஹிச்சிலேமா சுமார் 60% வாக்குகளையும், அவரது பிரதான போட்டியாளரான பிரையன் முண்டுபிலே 38% வாக்குகளையும் பெற்றுள்ளனர்.
ஹிச்சிலேமாவுக்கு இது ஜனாதிபதி பதவிக்கான ஏழாவது போட்டியாகும். அதேவேளை, முண்டுபிலே முதன்முறையாக ஜனாதிபதி பதவிக்கு போட்டியிட்டார்.
ஆகஸ்ட் 13ஆம் திகதி நடைபெற்ற தேர்தலுக்கு முன்னதாக நிலைமை அமைதியாக இருந்த போதிலும், தேர்தல் தினத்தன்று பதற்றம் அதிகரித்தது. அன்றிரவு இடம்பெற்ற சோதனை நடவடிக்கையின்போது முன்னணி எதிர்க்கட்சி உறுப்பினர்கள் உள்ளிட்ட 11 பேர் கைது செய்யப்பட்டதுடன், துப்பாக்கிச் சூடும் இடம்பெற்றதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
வன்முறை சம்பவங்கள் மற்றும் வாக்குச் சீட்டுகள் திருடப்பட்டதாக வெளியான தகவல்களைத் தொடர்ந்து, வாக்கு எண்ணும் பணிகள் சில மணி நேரம் இடைநிறுத்தப்பட்டன.
மேலும், வாக்கு எண்ணும் படிவங்களில் மாற்றங்கள் செய்யப்பட்டிருக்கலாம் எனத் தகவல் கிடைத்துள்ளதாக முண்டுபிலே குற்றஞ்சாட்டி, அவசர சுயாதீன விசாரணைக்கு அழைப்பு விடுத்தார். எனினும், ஹிச்சிலேமாவின் தரப்பு இந்தக் குற்றச்சாட்டை மறுத்துள்ளது.









