ஈராக்கின் வடக்குப் பகுதியில் உள்ள குர்திஷ் பிராந்தியத்தின் சுலைமானியா நகருக்கு அருகிலுள்ள எரிபொருள் களஞ்சியத்தில் ஏற்பட்ட பாரிய தீ விபத்தில் பலர் காயமடைந்துள்ளதுடன், 38 எரிபொருள் பவுசர்கள் தீக்கிரையாகியுள்ளன.
திங்கட்கிழமை (17) ஏற்பட்ட தீ விபத்தின் காட்சிகளில், சுலைமானியா நகரின் மீது பாரிய தீப்பிழம்புகளும் அடர்த்தியான புகைமூட்டமும் எழுவதைக் காண முடிந்துள்ளது.
சுலைமானியாவின் துணை பொது இயக்குநர் ஹெர்ஷ் சயீத் சலீம் தெரிவித்ததன்படி, இந்தச் சம்பவத்தில் உயிரிழப்புகள் எதுவும் பதிவாகவில்லை. எனினும், சுமார் 20 பேர் காயமடைந்துள்ளதுடன், அவர்களது காயங்கள் சிறியவை எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
உள்ளூர் ஊடகமான ஷபாக் செய்தி வெளியிட்ட தகவலின்படி, இருவர் தீக்காயங்களுக்கு உள்ளாகியுள்ளதுடன், அவர்களில் ஒருவருக்கு மருத்துவமனையில் சிகிச்சை அளிக்கப்பட்டுள்ளது.
தஞ்சாரோ பகுதியில் உள்ள களஞ்சியத்தில் நள்ளிரவுக்கு சற்று முன்னர் தீ பரவத் தொடங்கியதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்தப் பகுதி மாகாணத்தின் முக்கிய எரிபொருள் விநியோக நிலையங்களில் ஒன்றாகும்.
தீ வேகமாகப் பரவியதைத் தொடர்ந்து அவசரகால மீட்புப் படையினரும் பாதுகாப்புப் படையினரும் சம்பவ இடத்திற்கு விரைந்தனர். தீ பரவியபோது பல வெடிப்புகளும் இடம்பெற்றதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த தீ விபத்தில் 34 பெட்ரோல் பவுசர்களும் நான்கு டீசல் பவுசர்களும் தீக்கிரையாகியுள்ளதாகவும், 30 இலட்சத்துக்கும் அதிகமான லிட்டர் எரிபொருள் அழிந்துள்ளதாகவும் ஷபாக் செய்தி நிறுவனம் தெரிவித்துள்ளது.
சுலைமானியாவின் துணை ஆளுநர் ஷாஹோ ஒஸ்மான், தீ தற்போது கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவரப்பட்டுள்ளதாக தெரிவித்துள்ளார்.
எனினும், தீ விபத்துக்கான காரணம் இதுவரை கண்டறியப்படவில்லை.
சுலைமானியா சிவில் பாதுகாப்புப் பிரிவினர் தீயணைப்புப் பணிகளில் ஈடுபட்டிருந்த நிலையில், எர்பில் நகரின் சிவில் பாதுகாப்புப் பிரிவினரும் தேவை ஏற்படும் பட்சத்தில் உதவுவதற்குத் தயாராக இருந்ததாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
சம்பவத்தினால் ஏற்பட்ட மொத்த சேதம் தொடர்பான முழுமையான மதிப்பீட்டை அதிகாரிகள் இதுவரை வெளியிடவில்லை.
எரிபொருள் சந்தையின் பேச்சாளர் ரம்யார் ரிஸ்கர் மற்றும் களஞ்சியத்தின் உரிமையாளர் ஷேக் அப்துல்லா ஆகியோர், இந்த தீ விபத்து பிராந்தியத்தில் பெட்ரோல் விலை அதிகரிப்புக்கு வழிவகுக்கும் என எதிர்பார்க்கவில்லை எனத் தெரிவித்துள்ளனர்.









