இந்தோனேசியாவின் கிழக்குப் பகுதியில் ஏற்பட்ட 7.7 ரிக்டர் அளவிலான சக்திவாய்ந்த நிலநடுக்கத்தில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 68 ஆக உயர்ந்துள்ளது. மேலும் 200க்கும் மேற்பட்டோர் காயமடைந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
சனிக்கிழமை ஏற்பட்ட இந்த நிலநடுக்கத்தையடுத்து, இடிபாடுகளுக்குள் சிக்கியிருக்கக்கூடியவர்களை மீட்கும் பணிகளில் மீட்புப் படையினர் தொடர்ந்து ஈடுபட்டுள்ளனர். எனினும், தொடர்ச்சியான நில அதிர்வுகள் மற்றும் மண்சரிவுகள் மீட்புப் பணிகளுக்கு பெரும் இடையூறாக உள்ளன.
ஆயிரக்கணக்கான மக்கள் பாதுகாப்பான இடங்களுக்கு வெளியேற்றப்பட்டுள்ளதுடன், நில அதிர்வுகள் ஏற்படும் அச்சம் காரணமாக பலர் கூடாரங்களில் தங்கியுள்ளனர். கிழக்கு நுசா தெங்காரா மாகாணத்தில் திங்கட்கிழமை வரை சுமார் 1,600 பிந்தைய அதிர்வுகள் பதிவாகியுள்ளன.
மேலும், திங்கட்கிழமை காலை அப்பகுதியில் 5.6 ரிக்டர் அளவிலான நிலநடுக்கம் ஒன்று பதிவாகியதாக இந்தோனேசிய புவியியல் நிறுவனம் தெரிவித்துள்ளது.
நிலநடுக்கத்தால் ஏற்பட்ட மண்சரிவுகள் காரணமாக சிக்கா மற்றும் மங்கரை உள்ளிட்ட மாவட்டங்களில் பல வீதிகள் தடைப்பட்டுள்ளன.
பாதிக்கப்பட்ட மக்களுக்கு உணவு, கூடாரங்கள் உள்ளிட்ட அத்தியாவசியப் பொருட்களை விமானங்கள் மூலம் அனுப்புவதற்கு அதிகாரிகள் நடவடிக்கை எடுத்துள்ளனர். சுமார் 500 வீடுகள் சேதமடைந்துள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.










