ஹமாஸ் அரசியல் பிரிவு தலைவர் கலீல் அல்-ஹய்யா, எகிப்து தலைநகர் கெய்ரோவில் ஃபதாஹ் அமைப்பின் முக்கிய அரசியல் பிரிவொன்றின் தலைவர் மொஹமட் தஹ்லான் தலைமையிலான குழுவை சந்தித்துள்ளார்.
இந்தச் சந்திப்பில் காஸா போர் நிறுத்தப் பேச்சுவார்த்தை, எட்டப்பட்ட ஒப்பந்தத்தை இஸ்ரேல் நடைமுறைப்படுத்துவதை உறுதி செய்வது மற்றும் காஸாவுக்கான மனிதாபிமான உதவிகள் உள்ளிட்ட விடயங்கள் குறித்து கலந்துரையாடப்பட்டுள்ளன.
மேலும், மத்தியஸ்தர்கள் மற்றும் எகிப்திய அதிகாரிகளுடனான தனது சந்திப்புகள் தொடர்பாக அல்-ஹய்யா, பாலஸ்தீனிய அமைப்புகளின் தலைவர்கள் மற்றும் பிரதிநிதிகளுக்கு விளக்கமளித்துள்ளார்.
இதனைத் தொடர்ந்து, காஸா போர் நிறுத்த ஒப்பந்தத்தை நடைமுறைப்படுத்துவதில் இஸ்ரேல் தாமதத்தை ஏற்படுத்துவதாக பல்வேறு பாலஸ்தீனிய குழுக்கள் குற்றம் சாட்டியுள்ளன.ஏற்கனவே எட்டப்பட்ட சில உடன்பாடுகளை இஸ்ரேல் பின்பற்றவில்லை என்றும் அவர்கள் தெரிவித்துள்ளனர்.
ஃபதாஹ் அமைப்புக்குள் செல்வாக்கு மிக்க சீர்திருத்தவாத அரசியல் பிரிவாக ஜனநாயக தேசிய நீரோட்டம் செயல்பட்டு வருவதுடன், மஹ்மூத் அப்பாஸின் மத்திய தலைமையிலிருந்து தனியாக இயங்கி வருகின்றமை குறிப்பிடத்தக்கது.









