இலங்கை டெஸ்ட் அணியின் முன்னாள் தலைவரான திமுத் கருணாரத்ன, நிரோஷன் திக்வெல்லா மீண்டும் இலங்கை டெஸ்ட் அணியில் இடம்பெற்றுள்ளமை தொடர்பான சர்ச்சை குறித்து கருத்து தெரிவித்துள்ளார்.
திக்வெல்லாவை அணியில் இணைத்துக்கொள்ளும்போது, அவரது விக்கெட் காப்பாளர் திறமை மற்றும் டெஸ்ட் போட்டிகளில் உள்ள அனுபவம் ஆகியவற்றை தேர்வாளர்கள் கருத்திற்கொண்டிருக்கலாம் என திமுத் கருணாரத்ன தெரிவித்துள்ளார்.
மேலும், திக்வெல்லாவின் தெரிவு தொடர்பில் அதிகளவில் விவாதங்களும் சர்ச்சைகளும் இடம்பெற்றுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
எனினும், அண்மைய போட்டிகளில் வெளிப்படுத்திய துடுப்பாட்டம் மற்றும் தற்போதைய ஆட்டத்திறனை கருத்திற்கொள்ளும்போது, அஞ்சல பண்டார மற்றும் சதீர சமரவிக்ரம ஆகியோர் திக்வெல்லாவை விட முன்னிலையில் இருப்பதாக திமுத் கருணாரத்ன தெரிவித்துள்ளார்.
இருப்பினும், எதிர்வரும் டெஸ்ட் தொடர் திக்வெல்லாவுக்கு தனது திறமையை நிரூபிக்க கிடைத்துள்ள முக்கியமான வாய்ப்பு எனவும், இந்தத் தொடரில் அவரது செயல்பாடு எதிர்கால டெஸ்ட் கிரிக்கெட் பயணத்தில் குறிப்பிடத்தக்க தாக்கத்தை ஏற்படுத்தக்கூடும் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.
தனது முன்னாள் அணித்தோழரான திக்வெல்லாவுக்கு வாழ்த்துகளைத் தெரிவித்த திமுத் கருணாரத்ன, இந்தத் தொடர் அவரது கிரிக்கெட் வாழ்க்கையில் மிகவும் சவாலானதும் முக்கியமானதுமான தொடராக அமையக்கூடும் என குறிப்பிட்டுள்ளார்.
மூன்று ஆண்டுகளுக்குப் பின்னர் நிரோஷன் திக்வெல்லா இலங்கையின் டெஸ்ட் அணிக்கு மீண்டும் அழைக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
அப்ரா அன்சார்








