அறிவைப் புதுப்பித்தல் என்பது கல்வியின் பாரிய பணியாக மாறியுள்ளதாகவும், அடுத்த 75 வருடங்களில் நாடு முன்னோக்கிச் செல்ல வேண்டுமாயின் கல்வி முறைமையில் புதிய மாற்றம் ஏற்பட வேண்டுமென ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க குறிப்பிட்டார்.
நவீன தொழிநுட்பமும் அறிவும் கல்வியின் புதிய ஆயுதங்களா மாறியுள்ளதை சுட்டிக்காட்டிய ஜனாதிபதி, நாட்டின் பொருளாதாரம் எவ்வளவுதான் பலப்படுத்தப்பட்டாலும், நாடு உலகத்துடன் முன்னேறி மாற்றமடையாவிட்டால் அது பின்னோக்கிச் செல்லும் என்றும் சுட்டிக்காட்டினார்.
05.04.2024 பிற்பகல் இடம்பெற்ற கொழும்பு சிறிமாவோ பண்டாரநாயக்க கல்லூரியின் 2022 வருடாந்த பரிசளிப்பு விழாவில் கலந்து கொண்ட ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க இதனைக் குறிப்பிட்டார்.
கல்லூரிக்கு வருகை தந்த ஜனாதிபதியை மாணவர்கள் அன்புடன் வரவேற்றதுடன், சிரேஷ்ட மேற்கத்திய இசைக்குழு, சிரேஷ்ட கிழக்கு இசைக்குழு மற்றும் நடனக் குழுவினர் ஜனாதிபதியை விழா மண்டபத்திற்கு அழைத்து வந்தனர்.
2022 ஆம் ஆண்டு உயர்தரப் பரீட்சையில் சகல பாடங்களிலும் சிறந்த சித்திகளைப் பெற்ற மாணவிகளுக்கும், சிறந்த பெறுபேறுகளைப் பெற வழிகாட்டிய ஆசிரியர்கள் மற்றும் 2022 இல் குறைந்த விடுமுறை எடுத்த ஆசிரியர்களுக்கும் ஜனாதிபதி பரிசில்களை வழங்கினார்.
நான்கு மாணவிகளுக்கு அவர்களின் சிறப்புத் தகுதிகளுக்காக விருதுகளையும் ஜனாதிபதி வழங்கியதுடன், கல்லூரியில் 2022 ஆம் ஆண்டின் மிகச் சிறந்த மாணவிக்கான “கலாநிதி சுமேதா ஜெயவீர” விருது ஜி. டி. ரனலி இமாஷா விமலரத்ன மாணவிக்கு வழங்கப்பட்டது.
அதிபர் கலாநிதி சுமேதா ஜயவீர ஜனாதிபதிக்கு நினைவுப் பரிசையும் வழங்கி வைத்தார்.
ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க பாடசாலையின் விசேட அதிதிகள் புத்தகத்தில் நினைவுக் குறிப்பு ஒன்றையும் இட்டார்.