ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவின் எண்ணக்கருவிற்கமைய ஆரம்பிக்கப்பட்ட அஸ்வெசும, உறுமய, மலைநாட்டுத் தசாப்தம் உள்ளிட்ட வேலைத் திட்டங்களின் பலன்களை மக்களுக்குப் பெற்றுக்கொடுக்க அரசியல்வாதிகளைப் போன்று அரசாங்க அதிகாரிகளும் ஒத்துழைக்க வேண்டியது அவசியமென ஜனாதிபதியின் தொழிற்சங்கப் பணிப்பாளர் நாயகம் சமன் ரத்னப்பிரிய தெரிவித்தார்.
2024 ஆம் ஆண்டிற்கான வரவு செலவுத் திட்டத்தில் முன்மொழியப்பட்ட உறுமய, அஸ்வெசும மற்றும் மலைநாட்டுத் தசாப்தம் உள்ளிட்ட திட்டங்கள் குறித்து அரசியல் செயற்பாட்டாளர்கள், தொழிற்சங்கத் தலைவர்கள், சிவில் அமைப்புக்களின் பிரதிநிதிகள் உள்ளிட்ட தரப்பினரைத் தெளிவுபடுத்துவதற்காக ஜனாதிபதி அலுவலகத்தில் அண்மையில் நடைபெற்ற சந்திப்பிலேயே அவர் இதனைத் தெரிவித்தார்,
ஜனாதிபதி தொழிற்சங்கள் தொடர்பாடல் பிரிவினால் இந்தச் சந்திப்பு ஏற்பாடு செய்யப்பட்டிருந்ததோடு, எதிர்வரும் நாட்களில் இந்தச் சந்திப்புகளை நாடளாவிய ரீதியில் நடத்துவதற்கும் திட்டமிடப்பட்டுள்ளது.
இதன்போது, அரசியல் நோக்கங்களைப் புறந்தள்ளிவிட்டு மக்களுக்கான மேற்படி வேலைத்திட்டங்களை சாத்தியப்படுத்த முன்வருமாறு அழைப்பு விடுத்த சமன் ரத்னப்பிரிய, மக்களை பொருளாதார ரீதியில் பலப்படுத்த இந்த வேலைத்திட்டம் உதவும் என்றும் கூறினார்.
இந்த சந்திப்பில் உரையாற்றிய ஜனாதிபதியின் பொருளாதார அலுவல்கள் தொடர்பிலான சிரேஷ்ட ஆலோசகர் கலாநிதி ஆர்.எச்.எஸ்.சமரதுங்க ஜனாதிபதியினால் முன்னெடுக்கப்படும் சரியான வேலைத்திட்டத்தின் பலனாக நாட்டில் பொருளாதார ஸ்திரதன்மை ஏற்பட்டிருப்பதாகவும் தெரிவித்தார்.
75 வருடங்களில் காணாத பொருளாதார நெருக்கடியை எதிர்கொண்டிருந்த நாடு சரியான பாதையில் பயணிக்க ஆரம்பித்திருக்கிறது என சுட்டிக்காட்டிய அவர், 2022 ஜூலை மாதத்தில் 19 மில்லியன் டொலாக சரிவடைந்திருந்த வௌிநாட்டுக் கையிருப்பு, 2024 ஆம் ஆண்டில் 4.5 பில்லியன் டொலர்கள் வரை அதிகரித்துள்ளதெனவும் தெரிவித்தார்.
ஜனாதிபதியின் சிரேஷ்ட மேலதிகச் செயலாளர் (விவசாய வலுவூட்டல் மற்றும் காணி) சந்திரா ஹேரத், ஜனாதிபதியின் மேலதிகச் செயலாளர் (உணவுப் பாதுகாப்பு மற்றும் உட்கட்டமைப்பு வசதிகள் அபிவிருத்தி) வர்ணத் பெரேரா மற்றும் சமூக நலன்புரிச் நன்மைகள் சபையின் தலைவர் ஜயந்த விஜேரத்ன உள்ளிட்ட பலரும் இந்த சந்திப்பில் கருத்து தெரிவித்தனர்.