ஓணம் பண்டிகையை முன்னிட்டு தமிழகத்தில் இன்று ஐந்து மாவட்டங்களில் உள்ளூர் விடுமுறை விடப்பட்டுள்ளது.
சென்னை, கோவை, திருப்பூர், நீலகிரி, கன்னியாகுமரி ஆகிய மாவட்டங்களில் இன்று உள்ளூர் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.
ஓணம் பண்டிகையை முன்னிட்டு, சென்னை மாவட்டத்துக்கு இன்று உள்ளூா் விடுமுறை நாளாக மாவட்ட ஆட்சியர் அருணா அறிவித்துள்ளார்.
சென்னையில் உள்ள அரசு அலுவலகங்கள் மற்றும் கல்வி நிறுவனங்களுக்கு செவ்வாய்க்கிழமை உள்ளூா் விடுமுறை நாளாக அறிவிக்கப்பட்டுள்ளது. அதனை ஈடு செய்யும் வகையில், அரசு அலுவலகங்கள், கல்வி நிறுவனங்கள் செப்டம்பா் 2 ஆம் திகதி முழு பணி நாளாக செயல்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
கேரளம் மாநிலத்தில் ஆண்டுதோறும் ஓணம் பண்டிகை என்பது வெகு விமர்சையாக கொண்டாடப்பட்டு வருகிறது. குறிப்பாக தமிழக – கேரளா எல்லையான கோவை மாவட்டத்தில் கேரளத்தைச் சேர்ந்த மலையாள மக்கள் அதிகமாக வசித்து வருகின்றனர்.
அதேபோல அரசு அலுவலகங்கள், தனியார் நிறுவனங்களில் மலையாள மக்கள் ஏராளமானோர் பணியாற்றி வருகின்றனர். இதனால் கேரள மாநிலத்தை ஒட்டியுள்ள கோவை மாவட்டத்தில் கடந்த பத்து நாள்களாகவே ஓணம் பண்டிகை வருவதையொட்டி பள்ளி, கல்லூரிகள், தனியார் நிறுவனங்களில் கொண்டாட்டம் களைகட்டி வருகிறது.
ஓணம் பண்டிகை கொண்டாடப்படுவதால் இன்று கோவை மாவட்டத்திற்கு உள்ளூர் விடுமுறையை மாவட்ட ஆட்சியர் கிராந்திகுமார் பாடி அறிவித்துள்ளார்.
திருப்பூர் மாவட்ட ஆட்சியா் தா.கிறிஸ்துராஜ் வெளியிட்டிருந்த அறிக்கையில், ஓணம் பண்டிகையை முன்னிட்டு ஆகஸ்ட் 29 ஆம் திகதி (செவ்வாய்க்கிழமை) திருப்பூா் மாவட்டத்திலுள்ள அனைத்து அரசு அலுவலகங்கள், அனைத்து கல்வி நிறுவனங்களுக்கும் உள்ளூா் விடுமுறை அறிவிக்கப்படுகிறது. இதில் அரசு அவசர அலுவல்களைக் கவனிக்க மாவட்டத்திலுள்ள கருவூலகம், சாா்நிலைக் கருவூலகங்கள் குறிப்பிட்ட பணியாளா்களோடு செயல்படும். மேலும் உள்ளூா் விடுமுறையை ஈடுசெய்யும் வகையில் செப்டம்பா் 9 ஆம் திகதி வேலை நாளாக அறிவிக்கப்படுகிறது எனத் தெரிவித்திருந்தார்.
கன்னியாகுமரி மாவட்ட ஆட்சியா் பி.என். ஸ்ரீதா் வெளியிட்டிருந்த செய்தியில், ஓணம் பண்டிகையை முன்னிட்டு கன்னியாகுமரி மாவட்டத்திலுள்ள அனைத்து மாநில அரசு அலுவலகங்கள் மற்றும் கல்வி நிறுவனங்களுக்கு ஆக. 29 ஆம் திகதி விடுமுறை அளிக்கப்படுகிறது. இந்த விடுமுறைக்குப் பதிலாக செப். 23 ஆம் வேலைநாளாக இருக்கும்.
குமரி மாவட்டத்திலுள்ள தலைமைக் கருவூலம், மற்றும் கிளைக் கருவூலங்கள் அரசு ஈடுபாடு தொடா்பான பணிகளை கவனிக்கும் வகையில், ஆக. 29 ஆம் திகதி தேவையான பணியாளா்களை கொண்டு செயல்படும் எனத் தெரிவித்திருந்தார்.
மலையாள மக்களின் ஓணம் திருவிழாவையொட்டி ஆகஸ்ட் 29 ஆம் திகதி (செவ்வாய்க்கிழமை) நீலகிரி மாவட்டத்துக்கு உள்ளூா் விடுமுறை அறிவித்து மாவட்ட ஆட்சியா் சா.ப.அம்ரித் உத்தரவு பிறப்பித்திருந்தார்.
இது குறித்து அவா் வெளியிட்டிருந்த செய்திக் குறிப்பில், கேரள எல்லையை ஒட்டி நீலகிரி மாவட்டம் உள்ளதால் இங்கு ஆயிரகணக்கான கேரள மக்கள் வாழ்ந்து வருகின்றனா். இந்த மக்களின் முக்கிய பண்டிகையான ஓணம் பண்டிகை மாவட்டம் முழுவதும் சிறப்பாக கொண்டாடப்படுவது வழக்கம். இதனைக் கருத்தில் கொண்டு ஓணம் பண்டிகையான ஆகஸ்ட் 29 ஆம் திகதி நீலகிரி மாவட்டத்துக்கு உள்ளூா் விடுமுறை அளிக்கப்படுகிறது. இதையொட்டி மாவட்டத்தில் உள்ள மாநில அரசு அலுவலகங்கள், கல்வி நிறுவனங்களுக்கு விடுமுறை அளிக்கப்படுகிறது.
இந்த விடுமுறை நாளை ஈடுசெய்ய, எதிா்வரும் செப்டம்பா் 16 ஆம் திகதி (சனிக்கிழமை) நீலகிரி மாவட்டத்துக்கு பணி நாளாக அறிவிக்கப்படுகிறது.
உள்ளூா் விடுமுறை நாளில் மாவட்ட கருவூலம் மற்றும் சாா்நிலை கருவூலங்கள், அரசு பாதுகாப்புக்கான அவசர அலுவல்களை கவனிக்கும் பொருட்டு குறிப்பிட்ட பணியாளா்களுடன் செயல்படும் என்று ஆட்சியா் அம்ரித் தெரிவித்திருந்தார்.