17ஆவது ஐ.பி.எல். கிரிக்கெட் இன்று (22) தொடங்கி மே 26ஆம் திகதி வரை இந்தியாவின் பல்வேறு நகரங்களில் நடக்கிறது. இன்று நடைபெறும் தொடக்க ஆட்டத்தில் சென்னை சூப்பர் கிங்ஸ் – ரோயல் செலஞ்சர்ஸ் பெங்களூரு அணிகள் மோத உள்ளன.
இந்நிலையில் நடப்பு தொடருக்காக ராஜஸ்தான் அணியில் இடம் பெற்றிருந்த அவுஸ்திரேலிய சுழற்பந்து வீச்சாளர் ஆடம் ஜாம்பா தொடரில் இருந்து விலகியுள்ளார். மேலும் குஜராத் அணியால் 3.6 கோடி இந்திய ரூபாவுக்கு வாங்கப்பட்ட ரொபின் மின்ஸ் என்ற இளம் இந்திய வீரரும் நடப்பு ஐ.பி.எல் தொடரில் இருந்து விலகியுள்ளார்.
இதையடுத்து இந்த இரு வீரர்களுக்கும் பதிலாக மாற்று வீரர்களை குஜராத் மற்றும் ராஜஸ்தான் அணி நிர்வாகங்கள் தற்போது அறிவித்துள்ளன. அதன்படி ராஜஸ்தான் அணியில் ஆடம் ஜாம்பாவுக்கு பதிலாக இந்தியாவை சேர்ந்த தனுஷ் கோட்யான் அவரது அடிப்படை விலையான 20 இலட்சம் இந்திய ரூபாவுக்கு ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளார்.
மேலும் குஜராத் அணியில் ரொபின் மின்ஸ்ஸுக்கு பதிலாக கர்நாடகாவை சேர்ந்த விக்கெட் கீப்பர், பேட்ஸ்மேனான பி.ஆர். ஷரத் அவரது அடிப்படை விலையான 20 லட்சம் இந்திய ரூபாவுக்கு ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளார்.