எதிர்வரும் தமிழ்,சிங்கள புத்தாண்டு கொண்டாட்டங்களுக்கு முன்னர் அனைத்து அத்தியாவசியப் பொருட்களின் விலைகளை குறைத்து பொதுமக்களுக்கு நிவாரணம் வழங்குவது தொடர்பில் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க தலைமையிலான அமைச்சரவையில் கலந்துரையாடப்பட்டதாக விவசாய மற்றும் பெருந்தோட்ட கைத்தொழில் அமைச்சர் மஹிந்த அமரவீர தெரிவித்துள்ளார்.
இலங்கைக்கு இறக்குமதி செய்யப்படும் பயன்படுத்தப்பட்ட தேங்காய் எண்ணெய் இறக்குமதியை கட்டுப்படுத்துவது மற்றும் உள்ளூர் தேங்காய் எண்ணெய் உற்பத்திகளின் தரத்தை மேம்படுத்துவது தொடர்பான கலந்துரையாடல் இன்று (14) விவசாய அமைச்சில் இடம்பெற்றது.
இக்கலந்துரையாடலில் விவசாயம் மற்றும் பெருந்தோட்ட கைத்தொழில் அமைச்சர் மகிந்த அமரவீர மற்றும் தென்னை அபிவிருத்தி அதிகார சபை மற்றும் தென்னை அபிவிருத்திச் சபையின் அதிகாரிகள் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.
இந்த நாட்டில் உற்பத்தி செய்யப்படும் தேங்காய் எண்ணெய் உயர் தரம் வாய்ந்தது, ஆனால் அதிக அளவு இறக்குமதி செய்யப்பட்ட தேங்காய் எண்ணெய் ஏனைய நாடுகளில் பயன்படுத்தப்பட்டு அகற்றப்படுகிறது. இவற்றை உட்கொள்வதன் மூலம் நுகர்வோர் பல்வேறு சுகாதார பிரச்சினைகளை எதிர்நோக்க வேண்டியுள்ளதாக தேங்காய் தொடர்பான உற்பத்தி கைத்தொழில்களுக்கு பொறுப்பான அதிகாரிகள் சுட்டிக்காட்டினர்.
சந்தையில் தற்போது தேங்காய் எண்ணெய் விலை அதிகமாக உள்ளதால், விலை குறைப்பு குறித்தும் இங்கு கலந்துரையாடப்பட்டுள்ளது.
இதன்படி, தேங்காய் எண்ணெயின் தரத்தை மேம்படுத்துவதற்கும், இறக்குமதி செய்யப்படும் சமையல் எண்ணெயின் தரத்தை ஒழுங்குபடுத்துவதற்கும், அவற்றைக் கண்டறிவதற்குமான வேலைத்திட்டம் ஒன்றை அமைப்பதற்கு குழுவொன்றை நியமிக்க தீர்மானிக்கப்பட்டது.
அத்துடன், இது தொடர்பில் அமைச்சரவையின் கவனத்தை ஈர்க்கும் வகையில் அமைச்சரவைப் பத்திரமொன்றை சமர்ப்பிக்கவும் தீர்மானிக்கப்பட்டது.