இலங்கையின் பெட்ரோலிய சில்லறை விற்பனை நடவடிக்கைகளில் கடந்த மாதம் பிரவேசித்த யுனைடெட் பெட்ரோலியம் அவுஸ்திரேலியா, 2024 ஆம் ஆண்டின் நடுப்பகுதியில் செயற்பாடுகளை ஆரம்பிப்பதற்கான அனுமதிப்பத்திரத்தைப் பெற்றுக்கொள்ளத் திட்டமிட்டுள்ளதாக மின்சக்தி மற்றும் எரிசக்தி அமைச்சர் காஞ்சன விஜேசேகர தெரிவித்துள்ளார்.
அவுஸ்திரேலியாவை சேர்ந்த இந்த பெட்றோலிய சில்லறை விற்பனையாளர் மற்றும் இறக்குமதியாளர் நிறுவனம், முதலீட்டு சபையுடன் ஒப்பந்தத்தில் கையெழுத்திட திட்டமிட்டுள்ளது.
அத்துடன் இந்த ஆண்டின் பிற்பகுதியில் அதற்கான உரிமத்தைப் பெறவும் திட்டமிட்டுள்ளதாக அமைச்சர் குறிப்பிட்டுள்ளார்.
முன்னதாக கடந்த பெப்ரவரி 22 அன்று, அவுஸ்திரேலியாவின் யுனைடெட் பெட்றோலியம், இலங்கையின் மின்சக்தி மற்றும் எரிசக்தி அமைச்சுடன் உள்ளுர் சந்தைக்கு பெட்றோலிய பொருட்களை வழங்குவதற்கான ஒப்பந்தத்தில் கைச்சாத்திட்டுள்ளது.
இதன்படி அவுஸ்திரேலியாவுக்குச் சொந்தமான பெட்றோலிய சில்லறை விற்பனையாளர் மற்றும் இறக்குமதியாளருக்கு இலங்கை முழுவதும் 150 எரிபொருள் நிலையங்கள் ஒதுக்கப்பட்டுள்ளன.
மேலும் 50 புதிய எரிபொருள் நிலையங்களை நிர்மாணிப்பதற்கான உரிமையும் வழங்கப்பட்டுள்ளது.