கொழும்பு
ஸ்ரீலங்கா கிரிக்கெட் நிறுவனத்திற்கு இடைக்கால குழுவொன்றை நியமித்து, முன்னாள் விளையாட்டுத்துறை அமைச்சர் ரொஷான் ரணசிங்கவினால் நவம்பர் மாதம் 5ஆம் திகதி வெளியிடப்பட்ட வர்த்தமானியை இரத்து செய்து விளையாட்டு அமைச்சர் ஹரின் பெர்னாண்டோ மற்றுமொரு வர்த்தமானி அறிவித்தலை வெளியிட்டுள்ளார்.
இதன்படி, ஸ்ரீலங்கா கிரிக்கெட் நிறுவனத்தின் அதிகாரங்கள், பணிகள் மற்றும் கடமைகளை நிறைவேற்றுவதற்காக முன்னாள் விளையாட்டுத்துறை அமைச்சர் ரொஷான் ரணசிங்கவினால் நியமிக்கப்பட்ட இடைக்கால குழு கலைக்கப்பட்டுள்ளது.
சர்வதேச கிரிக்கெட் பேரவையினால் (ICC) இலங்கை கிரிக்கெட் அணிக்கு விதிக்கப்பட்டுள்ள தடையை நீக்கும் நோக்கில் இந்த வர்த்தமானியில் கையொப்பமிட்டதாக அமைச்சர் நேற்று (12) தனது உத்தியோகபூர்வ X பக்கத்தில் குறிப்பிட்டார்.
அத்துடன், ஸ்ரீலங்கா கிரிக்கெட் தொடர்பான கணக்காய்வாளர் நாயகத்தின் அறிக்கை தொடர்பிலும் கவனம் செலுத்துமாறு தாம் சர்வதேச கிரிக்கெட் பேரவையிடம் எழுத்துமூலம் கோரிக்கை விடுத்துள்ளதாகவும், குறித்த கணக்காய்வு அறிக்கை தொடர்பான மேலதிக நடவடிக்கைகள் தொடர்பில் சட்டமா அதிபர் திணைக்களத்திடம் தாம் வினவியுள்ளதாகவும் அமைச்சர் அந்த செய்தியில் குறிப்பிட்டுள்ளார்.