ஹோமாகம, பிட்டிபன, மஹேனவத்த தொழில்நுட்ப நகரத் திட்டத்திற்குச் செல்வதற்கான வசதியை மேம்படுத்தும் வகையில், எஞ்சியுள்ள வீதி நிர்மாணப் பணிகளை நிறைவு செய்வதற்கான போக்குவரத்து, நெடுஞ்சாலைகள் மற்றும் நகர அபிவிருத்தி அமைச்சர் முன்வைத்த யோசனைக்கு அமைச்சரவை அனுமதி வழங்கியுள்ளது.
புத்தாக்கம் மற்றும் அறிவுசார் தொழில்நுட்பத்தை அடிப்படையாகக் கொண்டு தேசிய பொருளாதாரத்தை வலுப்படுத்தும் நோக்கில் தொழில்நுட்ப நகரத் திட்டம் ஆரம்பிக்கப்பட்டது.
ஹோமாகம நகரில் நிலவும் போக்குவரத்து நெரிசலைக் குறைத்து, தொழில்நுட்ப நகரத்திற்குச் செல்வதற்கான நேரடி வழியை ஏற்படுத்தும் நோக்கில், ஹோமாகம வலவ்வத்தையிலிருந்து கொட்டுவானை வரையான மேற்கு புறவழிச்சாலை நிர்மாணப் பணிகள் 2020ஆம் ஆண்டு ஆரம்பிக்கப்பட்டன. இந்த வீதியை உயர் மட்ட வீதியுடன் இணைப்பதற்கு தற்போது சுமார் 50 மீற்றர் நீளமான வீதிப் பகுதி மாத்திரமே நிர்மாணிக்கப்பட வேண்டியுள்ளது.
அத்துடன், பிட்டிபன–தம்பே வீதியை தொழில்நுட்ப நகரத்தின் ஊடாக, கொட்டாவ–தலாகல வீதியுடன் இணைக்கும் வகையில், இலங்கை பல்கலைக்கழகத்திலிருந்து இலங்கை உயிரித் தொழில்நுட்ப நிறுவனத்திற்கான இணைப்பு வீதியை அமைக்கும் திட்டமும் முன்னெடுக்கப்பட்டுள்ளது. இந்த வீதிப் பகுதியில் சுமார் 650 மீற்றர் இன்னும் நிறைவு செய்யப்பட வேண்டியுள்ளது.
மேற்குறிப்பிட்ட புறவழிச்சாலை இணைப்பு மற்றும் உயிரித் தொழில்நுட்ப நிறுவனத்திற்கான இணைப்பு வீதி ஆகிய இரு பணிகளும் உள்நாட்டு நிதியைப் பயன்படுத்தி நிறைவு செய்யப்படவுள்ளன. இதன் மூலம் தொழில்நுட்ப நகரத்திற்கு நேரடி போக்குவரத்து இணைப்பு ஏற்படுத்தப்படுவதுடன், பிராந்திய போக்குவரத்து நெரிசலும் குறைக்கப்படும்.









