இலங்கை கிரிக்கெட் வீரர் சாமிக கருணாரத்னே, தனது குழந்தையின் தந்தை எனக் கூறி விமானி ரசிகா செவ்வந்தி தாக்கல் செய்துள்ள வழக்கில், டிஎன்ஏ பரிசோதனைக்காக இரத்த மாதிரி வழங்குமாறு அவருக்கு உத்தரவிடக் கோரிய மனுவை கொழும்பு மாவட்ட நீதிமன்றம் நிராகரித்துள்ளது. இதற்கு எதிராக கொழும்பு சிவில் மேன்முறையீட்டு உயர் நீதிமன்றத்தில் மேன்முறையீடு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.
டிஎன்ஏ பரிசோதனை நடத்துவதற்கு போதுமான காரணங்கள் முன்வைக்கப்படவில்லை எனத் தீர்மானித்த கொழும்பு மாவட்ட நீதிமன்றம், குறித்த கோரிக்கையை நிராகரித்துள்ளது.
விமானி ரசிகா செவ்வந்தி தாக்கல் செய்துள்ள இந்த வழக்கில், கருணாரத்னே தனது குழந்தையின் தந்தை எனக் கூறியுள்ளதுடன், அதனை சட்டபூர்வமாக உறுதிப்படுத்துமாறு நீதிமன்றத்திடம் கோரியுள்ளார்.
தனது மனுவில், கருணாரத்னேவை குழந்தையின் தந்தையாக அறிவிக்குமாறும், அதற்கமைய அவரது பெயரை குழந்தையின் பிறப்புச் சான்றிதழில் குறிப்பிடுவதற்கு பதிவாளர் நாயகத்திற்கு உத்தரவிடுமாறும் அவர் கோரியுள்ளார்.
சுமார் 2023ஆம் ஆண்டு முதல் தானும் கருணாரத்னேவும் உறவில் இருந்ததாகவும், தான் கர்ப்பமான பின்னர் அவர் குழந்தையின் தந்தை என்பதை ஏற்க மறுத்ததாகவும் செவ்வந்தி தனது மனுவில் தெரிவித்துள்ளார்.
எனினும், கருணாரத்னே இந்தக் குற்றச்சாட்டை தொடர்ந்து மறுத்து வருவதுடன், டிஎன்ஏ பரிசோதனைக்கு உட்படுவதற்கும் எதிர்ப்பு தெரிவித்துள்ளார்.









